/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு செயலர்கள் அலட்சியம்... வாடிய மலர் செடிகளால் வருவாய் போச்சு
/
அரசு செயலர்கள் அலட்சியம்... வாடிய மலர் செடிகளால் வருவாய் போச்சு
அரசு செயலர்கள் அலட்சியம்... வாடிய மலர் செடிகளால் வருவாய் போச்சு
அரசு செயலர்கள் அலட்சியம்... வாடிய மலர் செடிகளால் வருவாய் போச்சு
ADDED : மார் 02, 2025 04:33 AM

காலத்தோடு விற்றிருந்தால் நல்ல வருவாய் கிடைக்க வேண்டியதை விட்டு, 17 நாட்களுக்குப் பிறகு மலர் செடிகளை விற்பனை செய்து வருகிறது புதுச்சேரி வேளாண் துறை.
கடந்த மாதம் புதுச்சேரி வேளாண் துறை சார்பில், தாவரவியல் பூங்காவில் மூன்று நாட்கள் காய் - கனி மலர் கண்காட்சி நடந்தது. புதுச்சேரி மட்டுமின்றி தமிழக பகுதியில் இருந்தும் ஏராளமானோர் கண்காட்சியை காண குவிந்தனர்.
தாவரவியல் பூங்காவே மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. இந்த கண்காட்சியில் பல்வேறு வகையான பழக்கன்றுகள் மற்றும் மலர் செடிகள் மானிய விலையில் விற்பனை செய்யப்பட்டது. மேலும் பார்வையாளர்களை கவரும் வகையில் புதுச்சேரி லாஸ்பேட்டை வேளாண் தோட்டக்கலை பிரிவில் உற்பத்தி செய்யப்பட்ட ஜினிய, செலோஸ்ஷியா, சால்வியா, பெட்டுனியா, வெர்பினா, டொரோனியா, டயான்டஸ், பால்சம், காஸ்மஸ், கேலன்டுலா, வின்கா, ஸ்னாப்டிராகன், காம்ப்ரினா, மேரிகோல்டு உள்பட 20 வகையான 35 ஆயிரம் அழகு மலர் செடிகள் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டன.
ஒவ்வொரு ஆண்டும் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படும் மலர் செடிகள் அகற்றப்படாமல் பூங்காவிலேயே வாடி கருகிவிடும். இந்தாண்டு கண்காட்சி முடிந்தபின் காட்சிப்படுத்தப்பட்ட மலர் செடிகளை வீணாகி வருவதை தடுத்து வருவாய் ஈட்டும் நோக்கில் 50 சதவீத மானிய விலையில் தொட்டியுடன் கூடிய ஒரு மலர் செடியை 25 ரூபாய்க்கு விற்க வேளாண்துறை அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டனர்.
அதைத் தொடர்ந்து இதற்கான அனுமதி கேட்டு அரசு செயலர்களுக்கு கோப்புகள் அனுப்பப்பட்டது. ஆனால் அரசு செயலர்கள் கண்காட்சி முடிந்து 17 நாட்களுக்குப் பிறகு அனுமதி அளித்ததால், பல்லாயிரக்கணக்கான மலர் செடிகள் பூங்காவிலேயே வாடி கருகி விட்டது.
எஞ்சியுள்ள சில ஆயிரக்கணக்கான செடிகள் மட்டுமே விற்பனை செய்யும் பணி கடந்த 26ம் தேதி துவங்கி, நேற்று மதியம் 12:00 மணியுடன் முடிவடைந்தது.
கண்காட்சி முடிந்து உடனே விற்றிருந்தால், புதுச்சேரி வேளாண் துறைக்கு கூடுதல் வருவாய் கிடைத்திருக்கும். அரசு செயலர்களின் தாமதத்தால் செடிகள் கருகியதுடன், வருவாயும் குறைந்தது, வேளாண் துறை ஊழியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.