/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அனுமதியின்றி செயல்பட்ட விடுதிக்கு 'சீல்'
/
அனுமதியின்றி செயல்பட்ட விடுதிக்கு 'சீல்'
ADDED : ஜூன் 04, 2024 05:03 AM

புதுச்சேரி : புதுச்சேரி முல்லை நகரில் அனுமதியின்றி செயல்பட்ட தங்கும் விடுதியை நகராட்சி அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.
புதுச்சேரி சுற்றுலா நகரம் என்பதால், ஏராளமான வெளிமாநில சுற்றுலா பயணிகள் வருகின்றனர். பெரிய ஓட்டல்களில் அறை எடுத்து தங்கினால் அதிக கட்டணம் செலுத்த வேண்டும் என்பதால், சுற்றுலா பயணிகள் சிறிய வீடுகளை நாள் வாடகைக்கு எடுத்து கும்பலாக தங்குகின்றனர்.
இப்படி புதுச்சேரி நகர பகுதி முழுதும் உரிய அனுமதியின்றி நுாற்றுக்கணக்கான வீடுகள், சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதிகளாகவும், 'ஸ்டே ஹோம்' என மாற்றப்பட்டுள்ளது.
குடியிருக்கும் வீட்டை சுற்றுலா பயணிகளுக்கு நாள் வாடகைக்கு விடுவதால், யார் வந்து தங்குகின்றனர் என்ற முறையாக ஆவணம் சேகரிப்பது இல்லை. இது மாநில பாதுகாப்பில் மிகப்பெரிய கேள்வி குறியை உருவாக்கி வருகிறது. பார்க்கிங் வசதிகள் ஏதும் இருப்பது இல்லை. இதனால், சுற்றுலா பயணிகள் கார்கள் அனைத்தும் வீடுகள் முன்பு நிறுத்தப்படுகிறது.
இதுதவிர நகராட்சிக்கு எந்தவித கட்டணம் செலுத்துவது இல்லை. குடியிருப்பதற்கான வீடு என நகர அமைப்பு குழுமத்தில் அனுமதி பெற்று, குடிநீர் இணைப்பு, மின் இணைப்பு பெற்று கொண்டு, வணிக ரீதியில் வாடகை விட்டு சம்பாதித்து வருகின்றனர்.
இதுமட்டும் இன்றி, வீடுகளில் தங்கும் சுற்றுலா பயணிகள், அளவுக்கு அதிகமான மதுபோதையில் குத்தாட்டம் போடுவது, அரைகுறை ஆடையுடன் உலா வருவதால், விடுதி வாடகை வீட்டின் அருகில் வசிக்கும் மற்ற குடியிருப்புவாசிகள் கடும் அவதிக்கு ஆளாகின்றனர்.
இந்த நிலையில், புதுச்சேரி நகராட்சிக்கு உட்பட்ட முல்லை நகர் பகுதியில், ஒரு தனியார் அப்பார்ட்மெண்டில் நகராட்சியின் அனுமதியின்றி தங்கும் விடுதிகள் செயல்படுவதாக புகார்கள் வந்தது.
புதுச்சேரி நகராட்சி ஆணையர் கந்தசாமி உத்தரவின்பேரில், நகராட்சி வருவாய் பிரிவு அதிகாரி பிரபாகர் தலைமையிலான ஊழியர்கள் முல்லை வீதி அப்பார்ட்மெண்டில் ஹஜாமொய்தீன் என்பவருக்கு சொந்தமான வில்லா பீம் என்ற தங்கும் விடுதியை ஆய்வு செய்தனர். விடுதி எந்தவித அனுமதியின்றி செயல்பட்டது தெரியவந்தது.
விடுதி உரிமையாளருக்கு விளக்கம் கேட்டு புதுச்சேரி நகராட்சி நோட்டீஸ் அனுப்பியது. முறையான பதில் கிடைக்கவில்லை. இதனால் புதுச்சேரி நகராட்சி வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் உருளையன்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கிட்லா சத்யநாராயணன் முன்னிலையில், வில்லா பீம் தங்கும் விடுதியை பூட்டி சீல் வைத்தனர்.
புதுச்சேரி நகராட்சி ஆணையர் கந்தசாமி கூறுகையில்;
குடியிருப்பு என அனுமதி பெற்று விட்டு, இதுபோல் அனுமதியின்றி செயல்படும் தங்கும் விடுதிகள் கண்டறியப்பட்டு, உடனடியாக சீல் வைக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.