/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சிறந்த கல்லுாரிகளை தேர்வு செய்வது எப்படி
/
சிறந்த கல்லுாரிகளை தேர்வு செய்வது எப்படி
ADDED : மார் 31, 2024 04:47 AM

புதுச்சேரி, : 'தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சியில் சிறந்த கல்லுாரிகளை தேர்வு செய்வது குறித்து கல்வியாளர் உஷா ஈஸ்வரன் பேசியதாவது:
எந்த படிப்பாக இருந்தாலும் அதை எந்த கல்லுாரியில் படிக்கிறோம் என்பது முக்கியம். கல்விக் கடன் கிடைப்பது முதல் எதிர்காலத்தில் வேலை கிடைப்பது வரை நாம் பயிலும் கல்லுாரியை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது.
எனவே, எல்லா வகையிலும் சிறந்த கல்லுாரியைத் தேர்வு செய்வது ஒரு மாணவரின் கடமை. நாம் சேரும் கல்லுாரியில் படிப்பதற்கான மகிழ்ச்சியான சூழல் முதலில் உள்ளதா என்பதை கவனிக்க வேண்டும்.
கல்லுாரிகளில் உள்ள வசதிகளை ஆய்வு செய்து பல்கலை அங்கீகாரம் உள்ளதா? கல்லுாரிகளில் சிறப்பு வசதிகள் ஏதேனும் இருந்து அதற்கான சிறப்பு அங்கீகாரத்தை கல்லுாரிகள் பெற்றிருக்கிறதா என்பதை கவனிக்க வேண்டும். அந்த கல்லுாரியில் வேலைவாய்ப்பு எப்படி உள்ளது. பெரிய கம்பெனிகள் வருகின்றனவா என்பதை அறிந்து தேர்வு செய்ய வேண்டும்.
இது டிஜிட்டல் யுகம். எனவே கல்லுாரிகளில் நம்முடைய தேடலுக்கான மின்னணு இதழ்கள், சர்வதேச ஆராய்ச்சிகள் நுாலகங்களில் வழங்கப்படுகின்றனவா என்பதையும் ஆராய வேண்டும். படிக்கும் கல்லுாரியில் நாம் படித்ததை செயல்படுத்தி பார்க்கும் வசதிகள் உள்ளதா. ஆய்வகத்திற்கு அழைத்து சென்று பயிற்சி தருகிறார்களா என்று ஆராய்ந்து பார்ப்பதும் நல்லது. படிப்பு மட்டுமின்றி நம்மை ஊக்கப்படுத்தும் விளையாட்டு வசதிகளும் இருந்தால் தான் நம் ஊக்கமாக தொடர்ந்து பயணிக்க முடியும்.
தொழிற்சாலைகள் எதிர்பார்க்கும் திறமைக்கும் பாடத் திட்டத்திற்கும் சம்பந்தம் இல்லாமல் இருக்கக் கூடாது. புதிய தொழில்நுட்பங்கள் அனைத்து துறைகளிலும் புகுந்துவிட்டது. எனவே நாம் படிக்க போகும் கல்லுாரியில் செயற்கை நுண்ணறிவு, கோடீங், டேட்டா சயின்ஸ் என நவீன தொழில்நுட்பங்களை இணைத்து பாடத்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதா என்பதை விசாரித்தும் கல்லுாரியில் சேரலாம். பெற்றோரும், குழந்தைகளும் கொஞ்சம் விழிப்புணர்வோடு தேடினால், நல்ல எதிர்காலத்தை அமைத்துத் தரும் சிறந்த கல்லுாரிகளை நிச்சயம் தேர்வு செய்ய முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.

