/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் 'மது விலக்கு' பிரெஞ்சு ஆட்சியாளர்கள் அதிரடி
/
புதுச்சேரியில் 'மது விலக்கு' பிரெஞ்சு ஆட்சியாளர்கள் அதிரடி
புதுச்சேரியில் 'மது விலக்கு' பிரெஞ்சு ஆட்சியாளர்கள் அதிரடி
புதுச்சேரியில் 'மது விலக்கு' பிரெஞ்சு ஆட்சியாளர்கள் அதிரடி
ADDED : ஆக 11, 2024 05:35 AM

புதுச்சேரியில் தெருவுக்கு தெரு மதுபான பார்கள் உள்ளன. இதை தவிர, ரெஸ்டோ பார்களும் நாளுக்கு நாள் முளைத்து வருகின்றன. 'புதுச்சேரி'யை 'மதுச்சேரி' என்றே மற்ற மாநிலங்களை சேர்ந்தவர்கள் அழைக்கும் நிலை உள்ளது.
புதுச்சேரியில் புதிய மதுபான தொழிற்சாலைகள் துவங்க அனுமதி கொடுப்பதற்கு சட்டசபையில் எம்.எல்.ஏ.,க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
எம்.எல்.ஏ.,க்கள் விரும்பினால், மது கொள்கையை மாற்றுவதற்கு தயாராக இருப்பதாக, முதல்வர் ரங்கசாமி, எம்.எல்.ஏ.,க்கள் அடித்த பந்தை, அவர்கள் பக்கமே திருப்பி அனுப்பி உள்ளார்.
இதுபோன்ற சூழ்நிலையில், எதிர்கால தலைமுறையினரின் நலனை கருதி, புதுச்சேரியில் மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற குரல்கள் ஒலிக்க துவங்கி உள்ளன.
புதுச்சேரியில் மது விலக்கு சாத்தியமாகுமா? இங்கு மதுவிலக்கை நினைத்து பார்க்க முடியுமா? என கேள்விகள் எழுலாம். ஆனால், புதுச்சேரியில் மது விலக்கை அமல்படுத்திய வரலாறு உண்டு என்பதை நம்பி தான் ஆக வேண்டும். பிரெஞ்சு ஆட்சியின்போது, புதுச்சேரியில் ஓராண்டிற்கு மேல் மதுவிலக்கு அமலில் இருந்தது.
கடந்த 1741ல் மராட்டிய படைகள் தமிழகத்தை தாக்கியது. இந்த சமயத்தில் தான், புதுச்சேரியில் கள், சாராயம் உள்ளிட்ட மதுபானங்களை விற்கவும், குடிக்கவும் பிரெஞ்சுக்காரர்கள் தடை விதித்தனர். இதற்கு வினோதமான காரணமும் பிரெஞ்ச் ஆட்சியாளர்களால் கூறப்பட்டது.
கோடைக்காலத்தில் மிகுதியாக குடித்தால் வினோதமான நோய்கள் வருவதால் மார்ச் மாதம் துவங்கி, செப்டம்பர் மாதம் வரை மதுபானங்கள் விற்க, குடிக்க தடை விதிக்கப்படுகிறது; மீறி விற்றால் 1,000 வராகன் அபராதம், ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும், அபராத தொகையின் ஒரு பகுதி, பிச்சைக்காரர்கள் நல நிதியில் சேர்க்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
தோட்டங்கள், வீடுகள் அல்லது எந்த இடத்தில் ஒரு காசளவில் விற்றாலும், குடித்தாலும் தண்டனைக்குள்ளாவார்கள். அவரவர் கைவசம் உள்ள மது வகைகளை மூன்று நாட்களுக்கு அரசிடம் ஒப்படைக்க வேண்டும். சட்டத்தை மீறுவோர்களுக்கு கடும் தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
மீறியவர்களின் காலுக் கும், கைக்கும் விலங்கு போட்டு கோட்டை சிறையில் தள்ளப்பட்டனர்.
சில மாதங்களிலேயே, புதுச்சேரிக்கு மது விலக்கு சட்டம் சரியாக வராது என பிரெஞ்ச் ஆட்சியாளர்களுக்கு புரிந்து விட்டது போல தெரிகிறது.
1741ம் ஆண்டு பிப்வரியில் நடைமுறைக்கு வந்த மது விலக்கு சட்டத்தை அதே ஆண்டில் வாபஸ் பெற்றனர்.
கோடை நோய்களை காரணம் காட்டி, புதுச்சேரியில் மது விலக்கு அமல்படுத்தப்பட்டதாக பிரெஞ்சுக்காரர்கள் கூறினாலும், அது உண்மையல்ல.
மராட்டியர்கள் எந்த நேரத்திலும் போர் தொடுக்கலாம் என்று அஞ்சியே, பொதுமக்களை உஷாராக வைத்திருக்கும் வகையில் மது விலக்கை அமல்படுத்தி இருக்கின்றனர்.
அதற்கு பிறகு, குத்தகைதாரர்கள் சாராயம் காய்ச்சி விற்க பிரெஞ்சுக்காரர்கள் மீண்டும் அனுமதித்தனர். அன்று துவங்கிய மது கலாசாரம் இன்று வரை புதுச்சேரியில் தொடருகிறது.