வீடுகளில் வளர்க்கும் நாய்களுக்கு உரிமம் பெற அறிவுறுத்தல்
வீடுகளில் வளர்க்கும் நாய்களுக்கு உரிமம் பெற அறிவுறுத்தல்
ADDED : ஜூலை 17, 2026 07:43 PM

புதுச்சேரி: வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களுக்கு கட்டாயமாக உரிமம் பெற்றிட வேண்டும் என, உழவர்கரை நகராட்சி தெரிவித்துள்ளது.
இது குறித்து ஆணையர் அருண் அய்யாவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;
உழவர்கரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களுக்கு, கட்டாயமாக உரிமம் பெறுதல் அவசியமாக்கப்பட்டுள்ளது. இதற்காக, இந்நகராட்சி மூலம், மேட்டுப்பாளையம் கால்நடை மருத்துவமனையில் ஒவ்வொரு புதன் கிழமையும் வளர்ப்பு நாய்களுக்கு உரிமம் வழங்கப்படுகிறது.
புதிய உரிமம் பெற நாய் ஒன்றுக்கு ரூ.200 மற்றும் புதுப்பிப்பு கட்டணமாக ரூ.150 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மேற்கண்ட வசதியை பயன்படுத்தி தங்களின் வளர்ப்பு நாய்களுக்கு செப்டம்பர் மாதத்திற்குள் கட்டாயம் உரிமம் பெற்றுக் கொள்ள வேண்டும். மேலும், குறிப்பிடப்பட்ட காலக்கெடுவிற்குள் உரிமம் பெறாமல் வீடுகளில் நாய்களை வளர்ப்பது கண்டறியப்பட்டால், ரூ.2,000 அபராதம் விதிக்கப்படும் என, தினசரி நாளேடுகள் மூலம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, நகராட்சி குழுவினரால் வீடு வீடாக கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு, விதிமுறைகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படும். எனவே, பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களின் வளர்ப்பு நாய்களுக்கு உடனடியாக உரிமம் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
