/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஒருங்கிணைந்த கட்டளை, கட்டுப்பாட்டு அறை தயார்; டிராபிக் பிரச்னைக்கு 425 சி.சி.டி.வி. கேமரா
/
ஒருங்கிணைந்த கட்டளை, கட்டுப்பாட்டு அறை தயார்; டிராபிக் பிரச்னைக்கு 425 சி.சி.டி.வி. கேமரா
ஒருங்கிணைந்த கட்டளை, கட்டுப்பாட்டு அறை தயார்; டிராபிக் பிரச்னைக்கு 425 சி.சி.டி.வி. கேமரா
ஒருங்கிணைந்த கட்டளை, கட்டுப்பாட்டு அறை தயார்; டிராபிக் பிரச்னைக்கு 425 சி.சி.டி.வி. கேமரா
ADDED : செப் 15, 2024 07:17 AM

புதுச்சேரியில் போக்குவரத்து பிரச்னைகளை சரி செய்ய ரூ. 99 கோடி மதிப்பில் இன்டலிஜன்ட் டிராபிக் மேலாண்மை உள்ளிட்ட அதிநவீன வசதிகளுடன் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மற்றும் கட்டளை மையம் தயாராகி வருகிறது.
புதுச்சேரி பிரஞ்சு கலை நயமும், தமிழர்களின் பாரம்பரியத்துடன் வடிவமைக்கப்பட்ட அழகிய சுற்றுலா தளம். நாட்டின் பல பகுதியில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதனால் சுற்றுலாத்துறையில் வளர்ந்து வரும் புதுச்சேரியுடன், போக்குவரத்து பிரச்னைகளும் சேர்ந்து பூதாகரமாக உருவாகி வருகிறது.
குறுகிய சாலைகள், டிராபிக் உள்ளிட்டவையால் உள்ளூர் மக்கள் மட்டும் இன்றி வெளியூர் சுற்றுலா பயணிகளும் கடும் சிரமப்படுகின்றனர். புதுச்சேரியில் நிலவும் டிராபிக் பிரச்னைகளை சரிசெய்ய ரூ. 99 கோடி மதிப்பில், ஸ்மார்ட் சிட்டி மற்றும் வருவாய்த்துறை இணைந்து, ஒருங்கிணைந்த கட்டுப்பாடு மற்றும் கட்டளை மையம் ஒன்றை உருவாக்கி வருகிறது. இ.சி.ஆர்., நவீன மீன் அங்காடியின் முதல் தளத்தில் கட்டுப்பாடு மற்றும் கட்டளை மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதில் உள்ள அம்சங்கள்
போக்குவரத்து தகவமைப்பு கட்டுப்பாட்டு அமைப்பு: (ஏ.டி.சி.எஸ்.)
சிக்னல்களில் சிவப்பு விளக்கு கட்டாயம் 3 முதல் 4 நிமிடம் எரியும் வகையில் இருக்கும். தகவமைப்பு கட்டுப்பாட்டு அமைப்பின் மூலம், சாலையில் வாகனங்கள் குறைவாக இருந்தால், காத்திருக்கும் காலம் 1 நிமிடமாக குறைத்து சிக்னலை உடனடியாக திறக்கப்படும். அதுபோல் அதிக வாகனங்கள் வந்தால், சிக்னல் திறந்து வைக்கும் நேரம் நீட்டித்து கொள்ளும். இவ்வாறு சிக்னல்களில் காத்திருக்கும் வாகனங்களின் எண்ணிக்கையை பொருத்து சிக்னல்கள் தானாக நேரத்தை நிர்ணயித்து கொள்ளும் திறன் கொண்டது. 22 சிக்னல்களில் இந்த சிஸ்டம் பொருத்தப்பட உள்ளது.
இன்டலிஜன்ட் டிராபிக் மேலாண்மை திட்டம் (ஐ.டி.எம்.எஸ்.);
டிராபிக் சிக்னலில் விதிமீறலில் ஈடுபடும் வாகனங்களை கண்டறிந்து தானாக வழக்கு பதிவு செய்வது, எல்லை கோட்டை தாண்டி நிற்கும் வாகனங்களை கட்டுப்பாட்டு அறையில் இருந்து எச்சரிக்கை செய்வது, அதிவேகமாக செல்லும் வாகனங்கள், ஹெல்மெட், சீட் பெல்ட் அணியாமல் செல்லும் வாகன ஓட்டிகளை எச்சரிக்கப்படுவர். 22 டிராபிக் சிக்னல்களில் இந்த நவீன முறை கருவிகள் பொருத்தப்படும். அதிவேகமாக செல்லும் வாகனம், போக்குவரத்து விதிமீறல் ஈடுப்படும் வாகனங்களின் பதிவு எண்ணை படம் பிடித்து, வாகன உரிமையாளர் வீட்டிற்கே வழக்குபதிவு, அபராத தொகைக்கான சலான் அனுப்பப்படும்.
425 சி.சி.டி.வி. கேமராக்கள்
புதுச்சேரி முழுதும் 180 இடங்களில் 425 சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது. இதில், 35 சுழலும் கேமராக்கள் பொருத்தப்படுகிறது.
இதுதவிர, கட்டுப்பாட்டு அறையில் இருந்து எச்சரிக்கை செய்யும் ஒலி பெருக்கி அமைப்பு சிக்னல் உள்ளிட்ட 36 இடங்களில் அமைக்கப்படுகிறது. அவசர அழைப்பு பெட்டிகள் 25 அமைக்கப்படுகிறது.
இதன் மூலம் விபத்து, குற்ற சம்பவம் நடக்கும்போது அவசர கால அழைப்பு பெட்டியில் உள்ள பட்டனை ஆன் செய்தால், அருகில் இருக்கும் அனைத்து சி.சி.டி.வி.க்களும் அலர்ட் ஆகி வீடியோ பதிவுகளை கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பும். அங்கிருந்து உதவி தேவைப்படுவோருக்கு அளிக்க ஏற்பாடு செய்யப்படும்.
இதுதவிர 20 இடங்களில் மழை காலத்தில் வெள்ளம் ஏற்படும் இடங்களை கண்டறியும் சென்சார் அமைப்புகளும், 12 இடங்களில் சி.சி.டி.வி. கேமரா, வைபை வசதி, எலட்ரிக் பைக் சார்ஜர், ஒலி பெருக்கி, காற்றின் தரம் அறிதல், அவசர கால உதவி அழைக்கும் தொலைபேசி வசதியுடன் கூடிய ஸ்மார்ட் போல் அமைக்கப்படுகிறது.
3 இடங்களில் காற்றின் தரம் அறியும் சுற்றுச்சூழல் சென்சார் கருவியும், 11 இடங்களில் அரசின் நலத்திட்டம் மற்றும் விழிப்புணர்வு தகவல்களை அளிக்கும் டிஸ்பிளே அமைக்கப் படுகிறது.
உள்ளூர் மக்கள் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் பயன்பெறும் வகையில் புதுச்சேரியில் உள்ள அரசு துறைகளை இணைத்து ஒருங்கிணைந்த மொபைல் அப்ளிகேஷன் ஒன்றும் உருவாகி வருகிறது.
இவை அனைத்தும், இ.சி.ஆர்., நவீன மீன் அங்காடியில் உள்ள கட்டுப்பாட்டு மையத்துடன் இணைக்கப்படும்.
ஒட்டுமொத்த சி.சி.டி.வி., கேமராக்களில் பதிவாகும் காட்சிகள் கட்டுப்பாட்டு அறையில் இருக்கும் போலீசார், வருவாய்த்துறை, நகராட்சி, பொதுப்பணித்துறை, சுற்றுலாத்துறை, போக்குவரத்து துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணிப்பர். அங்கிருந்து டிராபிக் சிக்னல்களுக்கு ஒலி பெருக்கி மூலம் தொடர்ச்சியாக கட்டளைகள் வெளியாகும்.
நவீன மீன் அங்காடி வளாகத்தில், கட்டுப்பாட்டு மற்றும் கட்டளை மையம் தயாராகி விட்டது. சாலை மற்றும் சிக்னல்களில் சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தும் பணி நடந்து வருகிறது. இம்மாத இறுதியில் சோதனை நடக்கிறது.
டிசம்பர் மாதம் ஒருங்கிணைந்த கட்டுப்பாடு மற்றும் கட்டளை மையம் முழுமையாக செயல்பாட்டிற்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.