/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஜிப்மர் டாக்டர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நோயாளிகள் கடும் அவதி
/
ஜிப்மர் டாக்டர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நோயாளிகள் கடும் அவதி
ஜிப்மர் டாக்டர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நோயாளிகள் கடும் அவதி
ஜிப்மர் டாக்டர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நோயாளிகள் கடும் அவதி
ADDED : ஆக 17, 2024 02:41 AM

புதுச்சேரி: கோல்கட்டாவில் பெண் டாக்டரை, பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததை கண்டித்து, புதுச்சேரி ஜிப்மர் டாக்டர்கள் கால வரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், சிகிச்சைக்கு வந்த நோயாளிகள் கடும் அவதிப்பட்டனர்.
மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டா அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த முதுநிலை பயிற்சி பெண் டாக்டர் ஒருவர் கடந்த, 8ம் தேதி இரவு பணிக்கு வந்த நிலையில், மறுநாள் காலை கருத்தரங்க அறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
முதற்கட்டமாக, டாக்டரின் உடற்கூராய்வில், அவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இந்த விவகாரம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுதும் டாக்டர்கள், பெரும் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
புதுச்சேரி ஜிப்மர் டாக்டர்கள் சங்கம் சார்பில், மருத்துவ கல்லுாரி மாணவர்கள் மற்றும் டாக்டர்கள், கடந்த சில தினங்களுக்கு முன் கண்டன ஊர்வலம் நடத்தினர். தொடர்ந்து ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
இந்நிலையில் ஜிப்மரில் பணிபுரியும் சீனியர் டாக்டர்கள் 400 பேர், ஜூனியர் டாக்டர்கள் 600 பேர், என மொத்தம், 1000 பேர், நேற்று காலை முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை துவக்கி உள்ளனர்.
புறநோயாளிகள் பிரிவு வாயிலில் திரண்ட டாக்டர்கள், பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்களையும், ஓவியங்களையும் முகத்தில் வரைந்து கொண்டனர். பதாகைகளை கையில் ஏந்தி, கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் ஜிப்மரில் வெளிப்புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு ஒட்டுமொத்தமாக இயங்கவில்லை. ஆனால், பிரசவம், பச்சிளம்குழந்தை, கேன்சர் உள்ளிட்ட அவரச சிகிச்சை பிரிவுகளில் மட்டும், டாக்டர்கள் சுழற்சி முறையில் பணியை மேற்கொண்டனர்.
நேற்று சிகிச்சைக்கு வந்த புதுச்சேரி மற்றும் தமிழகத்தை சேர்ந்த ஏராளமான நோயாளிகள் கடும் அவதிப்பட்டனர்.
நோயாளிகளுக்கு சிக்கல்
புதுச்சேரி ஜிப்மருக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த, 5 ஆயிரம் பேர் புறநோயாளிகள் பிரிவில் தினசரி சிகிச்சைக்கு வருகின்றனர். டாக்டர்களின் வேலை நிறுத்த போராட்டம் தொடர்ந்து நீடிக்க உள்ளது. இதனால் சிகிச்சைக்கு வருபவர்கள் பாதிப்பிற்குள்ளாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

