/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கடலுார் மாவட்டத்தில் 3 பேருக்கு 'குண்டாஸ்'
/
கடலுார் மாவட்டத்தில் 3 பேருக்கு 'குண்டாஸ்'
ADDED : மே 05, 2024 05:56 AM

கடலுார் : நெய்வேலி மற்றும் விருத்தாசலத்தில் குற்ற செயல்களில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
நெய்வேலி, வட்டம்- 29ஐ சேர்ந்தவர் அன்பழகன், 50; கடந்த மாதம் 4ம் தேதி குடும்பத்தினருடன் வீட்டில் இருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த சுப்ரவேல் மற்றும் 2 பேர் அத்துமீறி நுழைந்து, முன்விரோதம் காரணமாக அன்பழகனை தாக்கி, கார் மற்றும் பைக்கை சேதப்படுத்தினர்.
இதுகுறித்து நெய்வேலி தெர்மல் போலீசார் வழக்குப் பதிந்து, சுப்ரவேல், 25; பாண்டியன் மகன் அந்நியன் என்கிற பரசுராமன், 20; கதிர்வேல் மகன் ஆனந்தகுமார், 20; ஆகிய 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதில், பரசுராமன், ஆனந்தகுமார் ஆகிய இருவர் மீதும் நெய்வேலி தெர்மல் போலீசில் ரவுடி லிஸ்ட் பராமரிக்கப்பட்டு வருகிறது. பரசுராமன் மீது கொலை முயற்சி, வீடு புகுந்து தாக்குதல் என 10 வழக்குகள் உள்ளன.
விருத்தாசலம்
விருத்தாசலம் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் தெய்வசிகாமணி தலைமையிலான போலீசார் கடந்த 14ம் தேதி கொடுக்கூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக சரக்கு வேனில், தொரவளூர் கிராமத்தை சேர்ந்த மோகன், 44; என்பவர் விற்பனைக்காக 'கள்' கடத்தி சென்றது தெரியவந்தது. உடன், போலீசார் வழக்கு பதிந்து, மோகனை கைது செய்தனர்.
மோகன் மீது, கருவேப்பிலங்குறிச்சி போலீசில் 2 சாராய வழக்குகள் உள்ளது.
இவர்கள் 3 பேரின் குற்ற செயல்களைக் கட்டுப்படுத்தும் பொருட்டு எஸ்.பி., ராஜாராம் பரிந்துரையின் பேரில் பரசுராமன், ஆனந்தகுமார், மோகன் ஆகிய 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் அருண்தம்புராஜ், உத்தரவிட்டார். அதன்பேரில் கடலுார் மத்திய சிறையில் உள்ள 3 பேரிடமும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவு நகலை போலீசார் வழங்கினர்.