/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சக தொழிலாளியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை
/
சக தொழிலாளியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை
ADDED : மே 01, 2024 07:17 AM

விழுப்புரம் : செஞ்சி அருகே கூலித் தொழிலாளியை கொலை செய்த வழக்கில், சக தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து விழுப்புரம் கோர்ட் தீர்ப்பளித்தது.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த பனமலை மதுரா மேட்டுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சேகர், 45; கூலித் தொழிலாளி. உமையாள்புரத்தை சேர்ந்தவர் ரங்கநாதன் மகன் சத்தியமூர்த்தி, 34; இருவரும் கடந்த 2016ம் ஆண்டு நவ., 13ம் தேதி பனமலை மதுரா ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் குடிநீர் குழாய் அமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, இருவருக்கும் இடையே கூலி பிரச்னை தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சத்தியமூர்த்தி, சேகரை கத்தியால் வெட்டினார். பலத்த காயமடைந்த சேகர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.
இதுகுறித்து அனந்தபுரம் போலீசார் வழக்கு பதிந்து சத்தியமூர்த்தியை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் எஸ்.சி., - எஸ்.டி., வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் கோதண்டபானி ஆஜரானார்.
வழக்கு விசாரணை முடிந்த நிலையில் நீதிபதி பாக்கியஜோதி நேற்று தீர்ப்பு கூறினார். அதில், சத்தியமூர்த்திக்கு ஆயுள் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார்.
அதையடுத்து, சத்தியமூர்த்தி, கடலுார் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.