/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விருதை அருகே மலக்கசடு சுத்திகரிப்பு நிலையம்; வீடுகளில் கருப்பு கொடியேற்றி மக்கள் எதிர்ப்பு
/
விருதை அருகே மலக்கசடு சுத்திகரிப்பு நிலையம்; வீடுகளில் கருப்பு கொடியேற்றி மக்கள் எதிர்ப்பு
விருதை அருகே மலக்கசடு சுத்திகரிப்பு நிலையம்; வீடுகளில் கருப்பு கொடியேற்றி மக்கள் எதிர்ப்பு
விருதை அருகே மலக்கசடு சுத்திகரிப்பு நிலையம்; வீடுகளில் கருப்பு கொடியேற்றி மக்கள் எதிர்ப்பு
ADDED : பிப் 21, 2025 11:45 PM

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே மலக்கசடு சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் வீடுகளில் கருப்பு கொடியேற்றியதால் பரபரப்பு நிலவியது.
கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த கம்மாபுரம் ஒன்றியம், கோட்டேரி ஊராட்சி எல்லையில் உள்ள முந்திரி தோப்பில், 14 ஏக்கர் பரப்பளவில் ரூ. 44 கோடி மதிப்பில் மலக்கசடு சுத்திகரிப்பு நிலையம் அமைத்து உரம் மற்றும் கழிவு நீரை சுத்திகரித்து குடிநீர் அல்லாத பயன்பாட்டிற்கு வழங்க முடிவு செய்யப்பட்டது.
இத்திட்டத்தை கடலுாரில் நேற்று நடந்த அரசு விழாவில் முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டுவதாக தகவல் பரவியது.
இதனால், அதிருப்தியடைந்த அருகில் உள்ளா முதனை ஊராட்சி மக்கள், இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று வீடுகள் தோறும் கருப்பு கொடியேற்றினர். தகவலறிந்த ஊமங்கலம் போலீசார், கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, கருப்பு கொடிகளை அகற்றினர்.
இது குறித்து முதனை கிராம மக்கள் கூறுகையில், 'கோட்டேரி ஊராட்சி எல்லையில் உள்ள முந்திரி தோப்பில் மலக்கசடு சுத்திகரிப்பு நிலையம் அமைத்தாலும், முதனை ஊராட்சியில் உள்ள விவசாய நிலங்கள், நிலத்தடி நீராதாரம் கடுமையாக மாசுபடும். ஆயிரக்கணக்கான குடியிருப்புகளில் வசிப்போருக்கு ஆழ்குழாய் மூலம் பெறப்படும் குடிநீரில் நச்சுத்தன்மை கலந்து விடும். மக்கள் சுவாசிக்கும் காற்றும் மாசுபடும். இங்குள்ள செம்பையனார் கோவில் திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர்.
இது தொடர்பாக கடந்தாண்டு நவம்பர் மாதம் நடந்த ஊராட்சி கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவித்து, தீர்மானம் நிறைவேற்றி கலெக்டரிடம் கொடுத்தோம். அப்போது இத்திட்டம் வராது என உறுதியளித்த அதிகாரிகள், முதல்வர் பங்கேற்கும் விழாவில் சப்தமின்றி அடிக்கல் நாட்டுவதை ஏற்க முடியாது.
கட்சி பாகுபாடின்றி கிராம மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து எதிர்ப்பதால், எங்களை மீறி ஒரு அடி பள்ளம் கூட தோண்ட அனுமதிக்க மாட்டோம். கடலுாரில் அடிக்கல் நாட்டினாலும், கோட்டேரியில் திட்டத்தை நிறைவேற்ற முடியாது என்றனர்.
முதல்வர் அடிக்கல் நாட்டவுள்ள திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றிய சம்பவம் விருத்தாசலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

