/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மலேரியா இல்லாத புதுச்சேரி: சுகாதாரத் துறை இயக்குனர் தகவல்
/
மலேரியா இல்லாத புதுச்சேரி: சுகாதாரத் துறை இயக்குனர் தகவல்
மலேரியா இல்லாத புதுச்சேரி: சுகாதாரத் துறை இயக்குனர் தகவல்
மலேரியா இல்லாத புதுச்சேரி: சுகாதாரத் துறை இயக்குனர் தகவல்
ADDED : ஏப் 27, 2024 04:30 AM
புதுச்சேரி : மலேரியா ஏற்படாத நிலையை தற்போது புதுச்சேரி அடைந்துள்ளது என, சுகாதாரத் துறை இயக்குனர் ஸ்ரீராமுலு தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதுச்சேரியில் 2021ம் ஆண்டு 5 நபர்களுக்கு மலேரியா நோய் கண்டறியப்பட்டது. 2022 முதல் 2024ம் ஆண்டு மார்ச் மாதம் வரை உள்ளூர் நோய் தொற்றால் மலேரியா பாதிப்பு இல்லாத நிலையை புதுச்சேரி எட்டியுள்ளது.
மலேரியா என்பது பிளாஸ்மோடியம் எனும் ஒட்டுண்ணியால் பரவும் நோயாகும். இந்நோய் பரப்பும் அனாபிலஸ் வகை பெண் கொசுக்கள் நன்னீரிலேயே உற்பத்தியாகின்றன. அதாவது சரியாக மூடப்படாத மேல்நிலைத்தொட்டிகள், கீழ்நிலைதொட்டிகள் மற்றும் கொசுபுகா வண்ணம் வலைகளால் மூடப்படாத கிணறுகளில் உற்பத்தியாகின்றன.
மலேரியா நோயானது பெண் அனாபிலஸ் கொசுக்களில் பிளாஸ்மோடியம் ஒட்டுண்ணி மனிதனை கடிக்கும்போது ஏற்படும். புதுச்சேரியை பொருத்தவரை பிளாஸ்மோடியம் வைவாக்ஸ் வகை ஒட்டுண்ணி பாதிப்பே பொதுவாக காணப்படுகிறது.
கடுமையான பாதிப்பு அல்லது மூளையை பாதிக்கும் பிளாஸ்மோடியம் பால்சிபாரம் வகை ஒட்டுண்ணி மலேரியா வட மற்றும் வடகிழக்கு மாநிலங்களிலேயே அதிகம் காணப்படுகிறது.
புதுச்சேரி மாநிலத்தை பொருத்தவரை பிளாஸ்மோடியம் வைவாக்ஸ் வகை ஒட்டுண்ணியால் பரவும் மலேரியாவே குறைந்த அளவில் காணப்படுகிறது. பிளாஸ்மோடியம் பால்சிபாரம் ஒட்டுண்ணி வகை மலேரியா பாதிப்பு அரிதாகவே ஏற்படுகிறது.
இதுவும் இவ்வகை நோய் பாதிப்பு உள்ள மாநிலங்களுக்கோ, பகுதிகளுக்கோ சென்று வரும் நபர்களுக்கு மட்டுமே ஏற்படுகிறது. சுகாதார துறையின் தொடர் நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் விளைவாக மலேரியா ஏற்படாத நிலையை தற்போது புதுச்சேரி அடைந்துள்ளது.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

