சொகுசு கார் போச்சே அமைச்சர்கள், அதிகாரிகள் புலம்பல்
சொகுசு கார் போச்சே அமைச்சர்கள், அதிகாரிகள் புலம்பல்
ADDED : ஜூலை 04, 2026 06:21 PM

சட்டசபை தேர்தல் முடிந்து புதிய அரசு பொறுப்பேற்றதும், சட்டசபையில் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்களுக்கு தனித்தனி அறைகள் ஒதுக்கப்படும். அவ்வாரு ஒதுக்கப்படும் ஒவ்வொரு அறைகளும் பல லட்சம் செலவில் அழகுப்படுத்தப்படுவது வழக்கமாக உள்ளது.
அதேபோன்று, அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்களுக்கு அரசு சார்பில் சொகுசு கார்கள் வழங்கப்படும். அதன்படி, தற்போது தேர்தலில் வெற்றி பெற்று அமைச்சர்களாக பதவியேற்றுள்ள 5 பேருக்கும் வழங்குவதற்காக, புதிய கார்கள் வாங்க கவர்னருக்கு அரசு சார்பில் கோப்பு அனுப்பப்பட்டது.
அந்த கோப்பை பார்த்த கவர்னர், கடந்த ஆட்சியில் அமைச்சர்கள் பயன்படுத்திய கார்களையே, புதிய அமைச்சர்களுக்கு ஒதுக்கீடு செய்ய உத்தரவிட்டு, புதிய கார் வாங்கும் கோப்பை திருப்பி அனுப்பியுள்ளார்.
அதேபோன்று, ஒவ்வொரு துறைகளுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்ட வாகனங்களின் விபரம், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பயன்படுத்தும் வாகனங்களின் விபரங்களையும் கோரியுள்ளார். மேலும், அதிகாரிகள் ஒன்றுக்கு மேற்பட்ட வாகனங்கள் பயன்படுத்தினால், கூடுதல் வாகனங்களை திரும்ப பெறவும் அதிரடி உத்தரவிட்டுள்ளார். கவர்னரின் இந்த அதிரடி உத்தரவு அமைச்சர்களையும், அதிகாரிகளையும் புலம்ப வைத்துள்ளது.
