/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாயமான கணவனை மீட்டு மனைவியிடம் ஒப்படைப்பு
/
மாயமான கணவனை மீட்டு மனைவியிடம் ஒப்படைப்பு
ADDED : மார் 07, 2025 04:48 AM

காரைக்கால், : காரைக்கால் மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்டு சாலையில் திரிந்த நபரை போலீசார் மனைவியிடம் ஒப்படைத்தனர்.
காரைக்கால் மாவட்டத்தில் நகர் பகுதி மற்றும் கடற்கரைச்சாலையில் கடந்த சில நாட்களாக சுமார் 45 வயது மதிக்க தக்க நபர் ஒருவர் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் சுற்றித்திரிந்தார்.
இவரை இளைஞர்கள் சிலர் நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் மற்றும் போலீசார் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து, அவருக்கு முகசவரம் ,செய்து புதிய உடைகள் வாங்கி கொடுத்தனர்.
பின் அவரிடம் விசாரித்ததில் அவர் தனது மொபைல் எண்ணை மட்டும் தெரிவித்துள்ளார்.
போலீசார்,ஆதார் சேவை மையத்தின் மூலம் மொபைல் போன் எண்ணை கொண்டு விசாரித்ததில் அவர், சிவகாசி மாவட்டத்தை சேர்ந்த அழகுமலை கண்ணன்,36; எனத் தெரியவந்தது.
போலீசார் கண்ணனின் மனைவி செல்வியை தொடர்புக்கொண்டு தகவல் தெரிவித்தனர். காரைக்கால் வந்த செல்வியிடம் கண்ணனை போலீசார் ஒப்படைத்தனர். அவர் கண்ணீர் மல்க போலீசாருக்கு நன்றி தெரிவித்து கணவரை அழைத்து சென்றார்.
கண்ணனும் அவரது மனைவியும் சிவகாசி பட்டாசு தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்துள்ளனர். தற்போது தொழில் முடங்கி போதிய வருமானம் இல்லாததால் கண்ணன் மது பழக்கத்திற்கு அடிமையாகி கடந்த டிசம்பர் ௨ம் தேதி வீட்டை விட்டு வெளியேறி மாயமானார்.
இதனால் குடும்பம் வருமானம் இழந்தது. அதனால் பிள்ளைகளை விடுமுறை நாட்களில் பட்டாசு தொழிலுக்கு அனுப்புகின்றனர் என போலீசார் தெரிவித்தனர்.