நிர்வாக முடக்கத்திற்கு முற்றுப்புள்ளி முதல்வருக்கு ம.மு.க., கோரிக்கை
நிர்வாக முடக்கத்திற்கு முற்றுப்புள்ளி முதல்வருக்கு ம.மு.க., கோரிக்கை
ADDED : ஜூன் 26, 2026 05:51 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் நிலவும் நிர்வாக முடக்கத்திற்கு முதல்வர் உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
அவரது அறிக்கை:
புதுச்சேரி சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி, 51 நாட்கள் கடந்தும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முழுமையான ஜனநாயக அரசு இன்னும் செயல்படாத நிலை மிகவும் கவலைக்குரியது.
அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கப்படவில்லை. இதற்கு முதல்வர் தனது கடமையிலிருந்து தவறிவிட்டார் என்று அர்த்தம். இதற்கு அவர் சொல்ல போகிறார்?
துறைகள் இல்லாத அமைச்சரவை என்பது பெயரளவிலான அமைச்சரவையே தவிர, செயல்படும் அரசல்ல.
ஒவ்வொரு அமைச்சரும் குறிப்பிட்ட துறைகளின் நிர்வாக பொறுப்பை ஏற்று செயல்பட வேண்டும் என்பதே ஜனநாயகத்தின் அடிப்படைக் கொள்கை.
அமைச்சர்களுக்கு துறைகள் இல்லாதபோது, அவர்கள் தங்களுடைய அரசியல் சாசன பொறுப்புகளை நிறைவேற்ற இயலாது.
அனைத்து துறைகளையும் முதல்வர் ஒருவரே தொடர்ந்து வைத்திருப்பது கூட்டு அமைச்சரவை பொறுப்பு என்ற அரசியல் சாசன கோட்பாட்டையே அர்த்தமற்றதாக்குகிறது.
இரட்டை எஞ்சின் அரசு, இன்று இரட்டை முடக்க அரசாக மாறியுள்ளது. விரைவான வளர்ச்சியையும், நல்லாட்சியையும் வழங்க வேண்டிய அரசு, இன்று நிர்வாக செயலிழப்பிற்கும் குழப்பத்திற்கும் காரணமாகியுள்ளது. அமைச்சர்களுக்கு ஏன் இதுவரை துறைகள் ஒதுக்கப்படவில்லை. துறைகள் ஒதுக்கப்படுவதை தடுக்கின்ற காரணம் என்ன?
முதல்வர் மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். ஒவ்வொரு நாளும் நீளும் இந்த தாமதம் நல்லாட்சியை மறுப்பதோடு மட்டுமல்ல; மக்களின் ஜனநாயகத் தீர்ப்புக்கும் அவமரியாதையாகும். எனவே, முதல்வர் உடனடியாக அனைத்து அமைச்சர்களுக்கும் துறைகளை ஒதுக்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
