/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் மிதமான மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி
/
புதுச்சேரியில் மிதமான மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி
ADDED : மே 16, 2024 10:57 PM

புதுச்சேரி: புதுச்சேரியில் நேற்று மிதமான மழை பெய்ததால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
புதுச்சேரி மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில், கோடை வெயில் கடந்த மாதம் முதல் சுட்டெரித்து வந்தது. கடந்த, 4,ம் தேதி முதல் அக்னி நட்சித்திரம் காரணமாக, வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது.
இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தனர். மதிய நேரங்களில், வீட்டை விட்டு வெளியே வர, பெரும்பாலான பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் தயக்கம் காட்டினர்.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக, காலையில் வெயிலின் தாக்கமும், மாலையில் குளிர்ச்சியான காற்றும் வீசியதால், சற்று வெப்பம் தணிந்தது. இதனிடையில், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய தெற்கு இலங்கை கடலோர பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
அதன் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நேற்று இடி, மின்னலுடன் மழை பெய்ய உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
அதன்படி, புதுச்சேரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் கருமேகங்கள் சூழ்ந்து குளிர்ந்த காற்று வீசியது. நள்ளிரவு முதல் புதுச்சேரியில், காற்றுடன் மிதமான மழை பெய்தது.
நேற்று மிதமான மழை பெய்தததால், வெப்பம் தணிந்து, குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மேலும், வட தமிழக கடற்கரை ஒட்டிய பகுதிகளில் அதிக ஆற்றல் உள்ள நெடு அலைகள் காரணமாக, நேற்றிரவு 11:30 மணி வரை கடல் சீற்றமாக இருக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனால், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியை சேர்ந்த கட்டுமர மீன் பிடி படகு மீனவர்கள், பாதுகாப்புடன் மீன் பிடிப்பில் ஈடுபடுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

