கால்நடைகள் உரியைாளர்களுக்கு நகராட்சி ஆணையர் எச்சரிக்கை
கால்நடைகள் உரியைாளர்களுக்கு நகராட்சி ஆணையர் எச்சரிக்கை
ADDED : ஜூலை 29, 2026 08:52 PM
புதுச்சேரி: சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக நிற்கும் கால்நடைகளை உரிமையாளர்கள் பிடித்து செல்லவில்லை எனில் நடவடிக்கை எடுக்கப்படும் என, உழவர்கரை நகராட்சி ஆணையர் அருண் அய்யாவு எச்சரித்துள்ளார்.
அவர், விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் விபத்து ஏற்படுவதை தடுக்க கால்நடை பட்டிகள், கோ சாலைகளில் அடைக்க உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டது.
அதையடுத்து, புதுச்சேரி உழவர்கரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாடுகள் வளர்ப்போர் தங்கள் மாடுகளை சாலை மற்றும் பொது இடங்களில் திரியவிட வேண்டாம். தங்களுக்கு சொந்தமான இடத்தில் மாடுகளை சுகாதாரமாக வளர்க்க வேண்டும்.
தொடர்ந்து, மாடுகள் சாலையில் சுற்றித்திரிந்தால், ஊழியர்கள் மூலம் பிடித்து அவற்றின் உரிமையாளர் மீது நடவடிக்கை மற்றும் அபராதம் விதிக்கப்படும். பிடிக்கப்படும் மாடுகளை உரிமையாளரிடம் வழங்கப்பட மாட்டாது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
