/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பசு மாடு மர்ம சாவு: பாகூரில் பரபரப்பு
/
பசு மாடு மர்ம சாவு: பாகூரில் பரபரப்பு
ADDED : மார் 31, 2024 04:38 AM
பாகூர் : பாகூரில் பசு மாடு மர்மமான முறையில் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாகூர், பத்மினி நகரை சேர்ந்தவர் கந்தன் மனைவி திலகவதி, 48; கூலி தொழிலளி. கந்தன் கடந்த மூன்று மாதங்களுக்கு முன், இறந்து விட்டார். திலகவதி தனது வீட்டில் பசு மாடுகளை வளர்த்து வருகிறார்.
நேற்று முன்தினம் மாலை மேய்ச்சலுக்கு சென்று திரும்பிய திலகவதிக்கு சொந்தமான பசு மாடுகளில் ஒன்று, ஒரு வீட்டின் அருகே தண்ணீர் தொட்டியில் இருந்த கழனி தண்ணீரை குடித்துள்ளது.
பின், சிறிது நேரத்தில் அந்த மாடு வாயில் நுரை தள்ளிய நிலையில் துடிதுடித்து இறந்தது. அதிர்ச்சியடைந்த திலகவதி, கழினி தண்ணீரில் யாரோ விஷம் வைத்து தனது பசு மாட்டை கொன்று விட்டதாக பாகூர் போலீசில் புகார் அளித்தார்.
இது குறித்து பாகூர் போலீசார் வழக்கு பதிந்து, பிரேத பரிசோதனைக்கு ஏற்பாடு செய்தனர். பாகூர் அரசு கால்நடை மருத்துவர் சம்பத்குமார், பசுமாட்டினை பிரேத பரிசோதனை செய்து, உடல் பாகங்களை ஆய்வுக்கு அனுப்பி உள்ளார்.
பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே பசு மாடு இறப்பிற்கான காரணம் தெரியவரும். இருப்பினும், பசு மாடு விஷம் வைத்து கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் பாகூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

