தேசிய அறிவியல் திறனறி தேர்வு வி.வி.எம்- கையேடு வெளியீடு
தேசிய அறிவியல் திறனறி தேர்வு வி.வி.எம்- கையேடு வெளியீடு
ADDED : ஜூலை 19, 2026 05:22 PM
புதுச்சேரி: தேசிய அறிவியல் திறனறித் தேர்வின் ‘வித்யார்த்தி விஞ்ஞான் மந்தன்’ திட்டத்தின் 2026–27ம் ஆண்டிற்கான தகவல் கையேடு வெளியீட்டு விழா ஆதித்யா பள்ளி வளாகத்தில் நடந்தது.
புதுச்சேரி மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜகோபால சுவாமி, கையேட்டை வெளியிட, முதல் பிரதியை ஆதித்யா கல்வி நிறுவனங்களின் நிறுவனர் ஆனந்தன் பெற்றுக் கொண்டார்.
இது குறித்து வி.வி.எம்., அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ராஜகோபால சுவாமி கூறுகையில், கடந்த 2025–26ம் கல்வி ஆண்டு தேர்வில் 1,800க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். புதுச்சேரி, வள்ளலார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த மாநில அளவிலான தேர்வில் போட்டியிட்ட 42 பள்ளிகளை சேர்ந்த 200 மாணவர்களில், 12 பேர் சிறந்தவர்களாக தேர்வு செய்யப்பட்டு, ஐ.ஐ.டி., அகமதாபாத்தில் நடந்த தேசிய அறிவியல் தேர்விற்கு அனுப்பப்பட்டனர்.
ஆதித்யா பள்ளியின் இரண்டு மாணவர்கள் தேசிய அளவிலான விருதுகளை வென்று சாதனை படைத்தனர். இவ்வாறு தேர்வு செய்யப்படும் மாணவர்கள், தேசிய அளவில் புகழ் பெற்ற ஆராய்ச்சி நிறுவனங்களில் உள்ள விஞ்ஞானிகளின் துணையோடு தங்களது விருப்பமான ஆராய்ச்சி முயற்சிகளை மேற்கொள்ளலாம் என்றார்.
இதற்கிடையே, புதுச்சேரி, காரைக்கால், மாகே மற்றும் ஏனாம் முழுதும் உள்ள மாணவ, மாணவியர்களிடையே அறிவியல் ஆர்வத்தை ஆழமாக விதைக்கும் நோக்கில், வரும் 2026–27ம் ஆண்டிற்கான பதிவில் 5,000க்கும் மேற்பட்ட மாணவர்களை இணைக்க அமைப்பு இலக்கு நிர்ணயித்துள்ளது. இத்தேர்வில் ஆதித்யா பள்ளிகளின் மாணவர்களை பெருமளவில் பதிவு செய்ய ஊக்குவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.
