ADDED : ஜூலை 27, 2026 07:32 PM

புதுச்சேரி: புதுச்சேரி, தேசிய மாணவர் படை (என்.சி.சி) சார்பில், ‘கடலுக்குப் போவோம் – திட்டம் ஸ்வர்ணம் 2026’ எனும் பாய்மரப்படகு கடல் சாகச பயணம் துவக்க விழா தேங்காய்த்திட்டு மீன்பிடி துறைமுகத்தில் நேற்று நடந்தது.
விழாவில் முதல்வர் ரங்கசாமி, கடல் சாகசப் பயணத்தைக் கொடியசைத்து துவக்கி வைத்து, பயணம் மேற்கொள்ளும் மாணவ, மாணவியரை வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்.
இதில், தற்காலிக சபாநாயகர் அன்பழகன், அய்யப்பன் எம்.எல்.ஏ., தேசிய மாணவர் படையின் குரூப் கமாண்டர் அஷிஷ் திவாரி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். முன்னதாக, விழாவிற்கு வந்த முதல்வருக்கு தேசிய மாணவர் படையினரின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
நேற்று துவங்கிய கடல் சாகசப் பயணம் வரும் செப்டம்பர் மாதம் 27ம் தேதி வரை மொத்தம் 63 நாட்கள் நடக்கிறது. புதுச்சேரி, கடலுார், கன்னியாகுமரி, துாத்துக்குடி, ராமேஸ்வரம் மற்றும் சென்னை உள்ளிட்ட கிழக்குக் கடற்கரை பகுதிகளில் சுமார் 800 கிலோமீட்டர் துாரம் பயணிக்கிறது. 100 தேசிய மாணவர் படை கேடட்டுகள் பங்கேற்றுள்ளனர்.
கடல்சார் வழிநடத்தல், கப்பல் இயக்கத் திறன், தலைமைத்துவம், குழுப்பணி, மன உறுதி, உயிர் காக்கும் திறன்கள் மற்றும் இந்தியாவின் கடல்சார் வளர்ச்சி, நீலப் பொருளாதாரம், கடல்சார் பாதுகாப்பு, மீன்வள மேம்பாடு, தொழில்நுட்ப புதுமைகள், நீருக்கடி ஆய்வு மற்றும் கடல்சார் அருங்காட்சியகங்கள் போன்ற துறைகளில் ஒருங்கிணைந்த வளர்ச்சியை உருவாக்குவதே பயணத்தின் முக்கிய இலக்காகும்.
சாகச பயணத்தை துவக்கி வைத்த முதல்வர் ரங்கசாமி பேசியதாவது:
மாணவர்கள் கடல் சாகச பயணம் மன தைரியத்தையும், எதையும் சாதிக்க ஊக்கம் தரும். இதனால் நாடு வளம் பெரும். வெற்றிக்கரமாக பயணம் முடிக்க வாழ்த்துகிறோம். திட்டங்கள் வாயிலாக நம் நாடு பெரும் வளர்ச்சி அடையும். உலக நாடுகளில் சிறந்த நாடாக இந்தியா வர மாணவர்களுக்கு ஒழுக்கத்தை தந்து சிறந்தவர்களாக உருவாக்க வேண்டும். என்றார்.
