/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அலட்சியம்: நீதிமன்றம் எச்சரித்தும் கண்டுகொள்ளாத அதிகாரிகள்: அய்யங்குட்டிப்பாளையத்தில் வரிசையாக பேனர்கள்
/
அலட்சியம்: நீதிமன்றம் எச்சரித்தும் கண்டுகொள்ளாத அதிகாரிகள்: அய்யங்குட்டிப்பாளையத்தில் வரிசையாக பேனர்கள்
அலட்சியம்: நீதிமன்றம் எச்சரித்தும் கண்டுகொள்ளாத அதிகாரிகள்: அய்யங்குட்டிப்பாளையத்தில் வரிசையாக பேனர்கள்
அலட்சியம்: நீதிமன்றம் எச்சரித்தும் கண்டுகொள்ளாத அதிகாரிகள்: அய்யங்குட்டிப்பாளையத்தில் வரிசையாக பேனர்கள்
UPDATED : ஏப் 30, 2024 08:12 AM
ADDED : ஏப் 30, 2024 05:18 AM

புதுச்சேரி: அய்யங்குட்டிப்பாளையம் கோபாலன் கடை சந்திப்பில் தடையை மீறி வைக்கப்பட்டுள்ள பேனர்களால் விபத்து ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரியின் அழகை கெடுக்கும் வகையில் பேனர் வைப்பதற்கும், போஸ்டர் ஒட்டுவதற்கும் தடை சட்டம் அமலில் உள்ளது. தமிழகம், புதுச்சேரியில் பேனர் வைக்க கூடாது என, சென்னை உயர்நீதிமன்றமும் தடை விதித்துள்ளது.
புதுச்சேரியில் அரசு உத்தரவு, சட்ட திட்டங்கள் ஆட்சியாளர்கள், அதிகாரம் மிக்கவர்களுக்கு ஏற்ப வளைத்து கொள்ளப்படுவது வழக்கம். சில நேரம் சட்டத்தை மீறியும் செயல்படுவர். அதுபோல், பேனர் தடை சட்டத்துக்கு புதுச்சேரி அரசியல் பிரமுகர்கள் கட்டுப்படுவது இல்லை. இதனால், நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் புதுச்சேரி முழுதும் பேனர் வைக்கின்றனர்.
தடை சட்டத்தை மீறி பேனர் வைப்போர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய மாவட்ட நிர்வாகம், போலீசார், வருவாய், உள்ளாட்சி, பொதுப்பணி போன்ற துறைகளின் அதிகாரிகள் தங்களுடைய பதவியை பாதுகாத்து கொள்ள, 'வாய் இருந்தும் மவுனியாக' மாறி விட்டனர்.
இதனால் புதுச்சேரியில் பேனர் வைக்கும் கலாசாரம் உச்சக்கட்டத்திற்கு சென்றது. பிறந்த நாள், இரங்கல், திருமணம், காதணி விழா, கட்சி துவக்கம், கடை திறப்பு என எதற்கு எடுத்தாலும் சாலையை அடைத்து பேனர் வைப்பது அதிகரித்தது.
சாலையின் பெரும்பகுதியை அடைத்து வைக்கும் பேனர்களால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணிக்கும் நிலை ஏற்பட்டது. உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காமல், சட்டத்தை மீறி பேனர் வைப்பதை கவனித்த புதுச்சேரி நீதிமன்றம், கடந்த பிப்ரவரி மாதம் சாட்டைய சுழற்றியது.
புதுச்சேரி தலைமை நீதிபதி சந்திரமோகன், பேனர் வைக்க சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடை உத்தரவு நகலுடன், புதுச்சேரி கலெக்டருக்கு கடிதம் எழுதினார். அதில், 'சாலை, நடைபாதை, பொது சொத்துக்களில் வைத்துள்ள பேனர், பிளக்ஸ் போர்டு, ஹோர்டிங், அலங்கார வளைவு, கட் அவுட்களை உடனடியாக அகற்ற வேண்டும். விதிமீறல் இருந்தால் நீதிமன்ற அவமதிப்பிற்கு ஆளாக நேரிடும்' என குறிப்பிட்டு இருந்தார்.
கடிதத்தை கண்ட மாவட்ட நிர்வாகம் உடனடியாக பேனர்களை அகற்ற உத்தரவிட்டது. அதன்படி, கடந்த பிப்ரவரி மாதம் புதுச்சேரி முழுதும் இருந்த பேனர்கள் அகற்றப்பட்டது. முக்கிய சாலைகள், சிக்னல்கள் பேனர்கள் இன்றி பளீச்சென மாறியது. நீதிமன்ற நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
இந்த சூழ்நிலையில், நீதித்துறை எச்சரிக்கையை மீறி, அய்யங்குட்டிப்பாளையத்தில், வழக்கம்போல் தடையை மீறி பேனர் வைத்துள்ளனர்.
புதுச்சேரி - வழுதாவூர் சாலை, அய்யங்குட்டிப்பாளையம் கோபாலன் கடை பஸ் நிறுத்தம் அருகே, கடந்த 14ம் தேதி இறந்த ஒரு நபரின் கண்ணீர் அஞ்சலி பேனர் வைக்கப்பட்டது. துக்க நிகழ்ச்சி முடிந்து 15 நாள் கடந்தும் பேனர் அகற்றப்படவில்லை.
இதே போன்று 10 அடி அகலம், 15 அடி உயரம் கொண்ட மற்றொரு பேனர், அய்யங்குட்டிப்பாளையம், மாரியம்மன் கோவில் பின்புற வீதி சந்திப்பில் ஐஸ்கிரீம் கடையை மறைத்து வைக்கப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து, கடந்த 26ம் தேதி, நடந்து முடிந்த திருமண வரவேற்பிற்காக, மணமக்களுடன் கூடிய வரவேற்பு பேனர், கோபாலன் கடை பஸ் நிறுத்தில் இருந்து குருமாம்பேட் பீர் கம்பெனி வரை, சாலையின் இரு பக்கத்திலும் வரிசையாக 20க்கும் மேற்பட்ட இடத்தில் வைக்கப்பட்டுள்ளது.
சூரிய வடிவில் வைக்கப்பட்டுள்ள பேனர்களில் நீட்டி கொண்டிருக்கும் இரும்பு கொடி கம்பிகள், இரு சக்கர வாகன ஓட்டிகள் மீது பட்டு விபத்து ஏற்படுத்துகிறது.
பேனர் தடை சட்டம், நீதிமன்ற உத்தரவு மீறி பேனர் வைத்தவர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

