நான்கு கிராமங்களின் மின் தன்னிறைவுக்கு... புதிய திட்டம்: 1,000 வீடுகளில் 2 மெகாவாட் மின் உற்பத்தி; சூரிய ஆற்றலில் புதுச்சேரி புதிய மைல்கல்
நான்கு கிராமங்களின் மின் தன்னிறைவுக்கு... புதிய திட்டம்: 1,000 வீடுகளில் 2 மெகாவாட் மின் உற்பத்தி; சூரிய ஆற்றலில் புதுச்சேரி புதிய மைல்கல்
UPDATED : ஜூலை 18, 2026 03:47 AM
ADDED : ஜூலை 17, 2026 09:01 PM

புதுச்சேரி: மாநிலத்தில் நான்கு கிராமங்களை தேர்வு செய்து ஆயிரம் வீடுகளில் 2 மெகா வாட் சூரிய ஒளி மின் உற்பத்தி செய்ய மின்துறை தயாராகி வருகிறது.
புதுச்சேரியின் அன்றாட மின்சாரத் தேவைக்கு மத்திய தொகுப்பிலிருந்து 540 மெகாவாட் மின்சாரம் ஒதுக்கப்படுகிறது. மாநிலத்தில் சொந்தமாக அணுமின் நிலையங்களோ அல்லது அனல் மின் நிலையங்களோ இல்லாத காரணத்தால், மின்சாரத் தேவைக்காக அண்டை மாநிலங்களையே புதுச்சேரி பெரிதும் நம்பியிருக்கிறது.
இந்தச் சூழலில், புதுச்சேரியின் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப சூரிய ஒளி மின் உற்பத்தி மட்டுமே நிரந்தர மற்றும் சிறந்த தீர்வாகத் திகழ்கிறது. இதனை உணர்ந்துள்ள மின்சாரத் துறை, சூரிய ஒளி மின்சக்தியை அதிகரிக்க தொடர்ந்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.
மின்சார துறையின் தொடர்ச்சியான விழிப்புணர்வினால், மாநிலத்தில் தற்போது வரை 91.29 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதில் வணிகக் கட்டடங்கள் 49.68 மெகாவாட் பங்களிப்புடன் முதலிடத்தில் உள்ளன. அதனைத் தொடர்ந்து குடியிருப்புப் பகுதிகளில் 18 மெகாவாட் மின்சாரம், நிறுவனங்களில் 9.2 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதர இடங்கள் மூலம் 12 மெகாவாட் மின்சாரம் கிடைத்து வருகிறது.
ஆண்டுக்கு சராசரியாக 2 மெகாவாட் சூரிய ஒளி உற்பத்தி கூடுதலாக அதிகரித்து வருகிறது. இத்தகைய செயல்பாடுகள் புதுச்சேரி பசுமை எரிசக்தி நோக்கி நகர்வதை உறுதிப்படுத்துகின்றன. இந்த முன்னேற்றத்தைத் தொடர்ந்து, மின்சாரத் துறை தற்போது ஒரு புதிய சிறப்பான திட்டத்தைத் தீட்டியுள்ளது.
அதன்படி, மாநிலத்தில் நான்கு கிராமங்களைத் தேர்வு செய்து, அங்குள்ள ஆயிரம் வீடுகளில் இலவசமாக சூரிய ஒளி மின் தகடுகளை பொருத்தி, கூடுதலாக 2 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யத் திட்டமிடப்பட்டு அதற்கான பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. இதற்கான கிராமங்களைத் தேர்வு செய்யும் பணிகள் தற்போது காரைக்கால் பகுதியில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த முன்னெடுப்பு மத்திய அரசின் பிரதமர் சூரிய ஒளி மின் உற்பத்தித் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் கீழ், 200 யூனிட்டிற்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோர்களின் வீடுகளில், அரசே நேரடியாகச் செலவு செய்து சூரிய ஒளி மின் தகடுகளைப் பொருத்தித் தர முடிவு செய்துள்ளது.
இந்த திட்டம் செயல்படுத்தப்படும்போது, அந்த கிராமங்கள் மின்சார உற்பத்தியில் முழுமையான தன்னிறைவு பெறும். அதுமட்டுமின்றி, நுகர்வோரின் தேவை போக எஞ்சியிருக்கும் மின்சாரம் புதுச்சேரியின் பொது மின் தொகுப்பில் சேர்க்கப்படும். இது பொதுமக்களின் மின் கட்டண சுமையைக் கணிசமாக குறைப்பதுடன், தனிநபர் வீடுகளையும் மின் உற்பத்திக் களங்களாக மாற்றும் சமூக மாற்றமாகவும் அமையும் என்று மின்சார துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மின்சாரத் துறையின் இந்த புதிய திட்டம், படிப்படியாக விரிவாக்கம் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, இத்திட்டம் எதிர்காலத்தில் மாநிலத்தின் மின்சாரப் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, கார்பன் வெளியேற்றத்தைக் குறைத்து பசுமை எரிசக்தி கொண்ட மாநிலமாக புதுச்சேரியை முன்னிறுத்தும் என்பதில் ஐயமில்லை.
