/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஏட்டு இறுதி சடங்கில் இயங்காத துப்பாக்கிகள்
/
ஏட்டு இறுதி சடங்கில் இயங்காத துப்பாக்கிகள்
ADDED : மார் 09, 2025 03:30 AM
புதுச்சேரியில் போலீசுக்கு பாதுகாப்பு பணிகளுக்காக துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளது. ஏ.கே. 47., ரிவால்வர், பாய்ண்ட் 303, எஸ்.எல்.ஆர்., உள்ளிட்ட பல வகையிலான துப்பாக்கிகள் உள்ளன. புதுச்சேரி போலீஸ் வரலாற்றில் ரவுடிகள் மீது துப்பாக்கி சூடு, தப்பியோட முயன்ற ரவுடி சுட்டு பிடிப்பு போன்ற சம்பவங்கள் இதுவரை நடந்தது இல்லை. துப்பாக்கிகளை போலீசார் தங்களின் பாதுகாப்பிற்காகவும், வி.ஐ.பி.,க்கள் பாதுகாப்பிற்கு மட்டுமே இதுவரை பயன்படுத்தி வருகின்றனர்.
துப்பாக்கி சுடும் பயிற்சிக்கும், ஆட்சியாளர்கள், போலீஸ் அதிகாரிகள் இறப்பின்போது துப்பாக்கி குண்டு முழங்க மரியாதை செலுத்தும் நிகழ்விற்கு மட்டுமே பயன்படுத்துகின்றனர். இந்நிலையில், காரைக்காலில் கடந்த 5ம் தேதி சாலை விபத்தில் இறந்த, நகர போக்குவரத்து காவல்நிலைய சிறப்புநிலை ஏட்டு அசோக்குமாரின் இறுதி சடங்கு நடந்தது.
இதில் போலீஸ் சார்பில் மரியாதை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
இறுதி சடங்கு நிகழ்வின்போது, 12 போலீசார் எஸ்.எல்.ஆர்., துப்பாக்கியுடன் 21 குண்டுகள் முழங்க மரியாதை அளிக்க காத்திருந்தனர். 3 ரவுண்டுகள் துப்பாக்கியால் சுட்டபோது, 2 துப்பாக்கியில் இருந்து மட்டுமே குண்டுகள் வெளியானது. மற்ற துப்பாக்கிகள் வெடிக்கவில்லை, ட்ரிகர் சத்தம் மட்டுமே வந்தது.
இறுதி சடங்கிற்கு வந்த சக போலீசார் இது குறித்து கேட்டபோது, துப்பாக்கிகள் மிகவும் பழமையானது. துப்பாக்கி பயன்படுத்தி வெகு நாட்கள் ஆகிறதால், பழுது ஏற்பட்டு துப்பாக்கி வெடிக்கவில்லை' என்றனர்.
போலீசார் பயன்படுத்தும் துப்பாக்கி குண்டுகள் ஒவ்வொன்றுக்கும் கணக்கு உள்ளது. கடந்த பல ஆண்டிற்கு முன்பு, சில போலீஸ் உயர் அதிகாரிகள் போலீஸ் ஆயுத கிடங்கில் இருந்து துப்பாக்கி குண்டுகள் வாங்கி சென்று வேட்டைக்கு பயன்படுத்தி சிக்கலில் மாட்டி உள்ளனர்.
அதுபோல் துப்பாக்கி குண்டுகளை வேட்டைக்கு பயன்படுத்திவிட்டு அதனை கணக்கு காண்பிக்க இதுபோன்று இறுதி சடங்கின்போது, வெறும் துப்பாக்கியை வெடிக்க வைப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.