/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சந்தை புதுக்குப்பத்தை முன்மாதிரி கிராமமாக மாற்ற பொதுமக்களிடம் அதிகாரிகள் கருத்துகேட்பு
/
சந்தை புதுக்குப்பத்தை முன்மாதிரி கிராமமாக மாற்ற பொதுமக்களிடம் அதிகாரிகள் கருத்துகேட்பு
சந்தை புதுக்குப்பத்தை முன்மாதிரி கிராமமாக மாற்ற பொதுமக்களிடம் அதிகாரிகள் கருத்துகேட்பு
சந்தை புதுக்குப்பத்தை முன்மாதிரி கிராமமாக மாற்ற பொதுமக்களிடம் அதிகாரிகள் கருத்துகேட்பு
ADDED : ஜூலை 31, 2024 04:12 AM

திருக்கனுார்: சந்தை புதுக்குப்பத்தை முன் மாதிரி கிராமமாக மாற்ற தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது தொடர்பான பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நேற்று நடந்தது.
மண்ணாடிப்பட்டு தொகுதி சந்தை புதுக்குப்பம் கிராமத்தை மத்திய அரசு அறிவுறுத்தலின் பேரில் ராஜ்யசபா எம்.பி., செல்வ கணபதி முன் மாதிரி கிராமமாக மாற்ற முடிவு செய்துள்ளார். இதையொட்டி கிராமத்தில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சிப் பணிகள் மற்றும் அடிப்படைத் தேவைகள் குறித்த மக்கள் கருத்து கேட்புக் கூட்டம் சந்தை புதுக்குப்பத்தில் நேற்று நடந்தது. வில்லியனுார் வட்டார வளர்ச்சி அலுவலர் வைசாஷ் பாகி, மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில் ராஜன் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில், போக்குவரத்து துறை, வருவாய்த்துறை, குடிமை பொருள் வழங்கல் மற்றும் விவகாரங்கள் துறை, கால்நடை துறை, வேளாண்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள், பொதுமக்கள், மகளிர் சுய உதவி குழுவினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், கிராமத்தின் முழு வரைபடத்தை வரைந்து அதன் மூலம் எந்தெந்த பகுதிகளில் என்னென்ன அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. இதனை அதிகாரிகள் பதிவு செய்து சப் கலெக்டர் ஒப்புதலின் பேரில் ஒன்றன்பின் ஒன்றாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.
குறிப்பாக, கிராமத்தில் நுாலகம், பூங்கா, தகன மேடை, அங்கன்வாடி மையம் உள்ளிட்டவைகள் அமைக்க வேண்டும். ஐய்யனார் கோவில் குளத்தை சுற்றிலும் சாலை அமைத்து பராமரிக்க வேண்டும். சாலை மற்றும் கழிவு நீர் வாய்க்கால்களை சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பொதுமக்கள் வலியுறுத்தினர்.