/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஓலா நிறுவனம் ரூ.50,000 நஷ்டஈடு வழங்க உத்தரவு
/
ஓலா நிறுவனம் ரூ.50,000 நஷ்டஈடு வழங்க உத்தரவு
ADDED : மார் 15, 2025 06:26 AM
புதுச்சேரி: எலக்ட்ரிக் பைக் புக்கிங்கை ரத்து செய்த ஓலா நிறுவனம் ரூ.௫௦ ஆயிரம் நஷ்டஈடு வழங்க புதுச்சேரி மாவட்ட நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டது.
கூனிச்சம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் நிரஞ்சனி. கடந்த 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒரு லட்சத்து 40 ஆயிரம் மதிப்புள்ள, ஓலா புரோ எலக்ட்ரிக் பைக் வாங்க அட்வான்ஸ் தொகை ரூ.43,540 செலுத்தி முன்பதிவு செய்தார். மீதி தொகை கொடாக் பிரைமல் நிதி நிறுவனத்தின் மூலம் செலுத்த ஓலா நிறுவனம் ஏற்பாடு செய்தது.
ஆனால் ஓலா நிறுவனம் கூறியபடி, மே மாதம் 27ம் தேதி வாகனம் டெலிவரி செய்யவில்லை. அதற்கு பதிலாக ஓலா நிறுவனம் வாகன முன்பதிவு புக்கிங்கை ரத்து செய்தது. இது தொடர்பாக நிரஞ்சனி ஓலா நிறுவனத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது, சரியான பதில் தரவில்லை.
இதற்கிடையே கொடாக் பிரைமல் நிறுவனம், வாங்காத பைக்கிற்கு முதல் இ.எம்.ஐ., தொகை ரூ. 4,891 எடுத்தது.
இது தொடர்பாக நிரஞ்சனி புதுச்சேரி மாவட்ட நுகர்வோர் ஆணையத்தில் புகார் அளித்தார். இந்த வழக்கை விசாரித்த, புதுச்சேரி மாவட்ட நுகர்வோர் ஆணைய தலைவர் முத்து வேல், உறுப்பினர்கள் கவிதா, ஆறுமுகம் அடங்கிய அமர்வு குழு, சரியான வர்த்தகம் நடைமுறையை கடைபிடிக்காதது, சேவையில் குறைபாடு உள்ளதை சுட்டி காட்டி, ஓலா நிறுவனத்திற்கு, ரூ. 50 ஆயிரம் நஷ்டஈடு வழங்கவும், ஒரு மாத தவணை தொகையை கொடாக் பிரைமல் நிறுவனம் வட்டியுடன் திரும்ப செலுத்தவும் உத்தரவிட்டது. மேலும் வழக்கு செலவுக்காக ஓலா மற்றும் கொடாக் பிரைமல் நிறுவனங்கள் தலா ரூ. 10 ஆயிரம் வழங்கவும் உத்தர விட்டது.