ADDED : ஆக 31, 2024 02:16 AM
பாகூர்: வேன் மோதிய விபத்தில் படுகாயமடைந்த மூதாட்டி பரிதாபாக உயிரிழந்தார்.
திருபுவனை அடுத்த மிட்டாமண்டகப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கருப்பாமணி 60; இவர் நேற்று முன்தினம் தவளக்குப்பம் அடுத்த இடையார்பாளையத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர், அன்று இரவு 10 மணியளவில் உறவினர் உஷாராணி என்பவருடன், புதுச்சேரி - கடலுார் சாலை இடையார்பாளையம் சந்திப்பு அருகே சாலையை கடக்க முயன்றார். அப்போது, அவ்வழியாக சென்ற தனியார் வேன் மோதியது.
இதில், படுகாயமடைந்த கருப்பாமணியை பொது மக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக புதுச்சேரி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.