ADDED : ஜூன் 10, 2026 05:51 PM
புதுச்சேரி: புதுச்சேரி தனியார் கம்பெனி மேலாளரிடம் ஆன் லைன் டிரேடிங்கில் ரூ. 36 லட்சம் மோசடி செய்த மர்ம நபர்களை சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர்.
தேங்காய்திட்டை சேர்ந்தவர், தனியார் கம்பெனியில் மேலாளராக உள்ளார். இவர், தனது பேஸ்புக் பக்கத்தில் வந்த குவாண்டம் ஏ.ஐ., ஆட்டோ- டிரேடிங் என்ற ஆன்லைன் வர்த்தகம் தொடர்பான விளம்பரத்தை பார்த்தார். தொடர்ந்து, அதில் வந்த லிங்கை ஓபன் செய்து, தனது விவரங்களை பதிவிட்டார்.
பின், அவரை தொடர்பு கொண்ட மர்ம நபர், ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என, கூறினார். அதனை நம்பிய அவர், மர்ம நபர் கூறிய டிரேடிங்கில் பல தவணைகளாக ரூ. 36 லட்சத்து 10 ஆயிரம் முதலீடு செய்தார். தனது முதலீட்டிற்கான லாபத்தை எடுக்க முயன்றபோது, முடியவில்லை. அதன் பிறகே தான் ஏமாற்றப்பட்டது தெரிய வந்தது.
இதேபோன்று புதுச்சேரி நபரிடம் 7 ஆயிரம், மேட்டுப்பபாளையம் பெண்ணிடம் ரூ.3,500, கோரிமேட்டை சேர்ந்தவரிடம் 1,111 ரூபாயை ஆன்லைன் டிரேடிங் மோசடியில் இழந்துள்ளனர்.
இதுகுறித்த புகார்களின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
