/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வம்பாக்கீரப்பாளையத்தில் 9 மாதம் பூட்டப்பட்டு இருந்த முத்துமாரியம்மன் கோவில் திறப்பு; பக்தர்கள் சூடம் ஏற்றி வழிபாடு

ADDED : மே 09, 2024 04:31 AM

புதுச்சேரி : வம்பாக்கீரப்பாளையத்தில் சீல் வைக்கப்பட்ட முத்துமாரியம்மன் கோவில், 9 மாதங்களுக்கு பிறகு போலீசார், தாசில்தார் முன்னிலையில் திறக்கப்பட்டது.
புதுச்சேரி வம்பாக்கீரப்பாளையம் மீனவ கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் 2 ஆண்டிற்கு ஒரு முறை பஞ்சாயத்து நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுவர்.
கடந்த 2021ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளுக்கு 2023ம் ஆண்டுடன் பதவிக்காலம் முடிந்தது. ஆனால், பதவி விலகாமல் 25 ஆண்டுகள் வரை பதவியில் இருப்போம் என தெரிவித்தனர். இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் கோவிலில் நடந்த கூட்டத்தில் இரு தரப்பினரும் மோதிக்கொண்டனர். இதனால் மாவட்ட நிர்வாகம் கோவிலை மூடி சீல் வைத்தது.
கிராம பஞ்சாயத்தார்கள் மற்றும் மீனவ கிராம மக்கள் கோவிலை திறக்க வலியுறுத்தி ஒதியஞ்சாலை போலீசார் மற்றும் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர். அதனை ஏற்று சப் கலெக்டர் அர்ஜூன்ராமக்கிருஷ்ணன் தலைமையில் கிராம பஞ்சாயத்தார்கள் மற்றும் போலீசார் முன்னிலையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
அதில், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் கோவில் நிர்வாகிகள் தேர்வு ஜூன் 4ம் தேதிக்கு பின்பு நடத்தி கொள்வது எனவும், அதுவரை கோவிலை திறந்து சுத்தம் செய்து, பூஜை செய்யும் பொறுப்பு கிராமத்தைச் சேர்ந்த 4 பெண்களிடம் ஒப்படைப்பது என முடிவு செய்தனர்.
அதைத் தொடர்ந்து நேற்று காலை ஒதியஞ்சாலை இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், தாசில்தார் பிரத்வி முன்னிலையில் கோவில் திறக்கப்பட்டது.
கிராம மக்கள் பஞ்சாயத்தார்கள் கோவிலுக்குள் சென்று மஞ்சள் நீர் தெளித்து கோவிலை சுத்தம் செய்து சூடம் ஏற்றி, தேங்காய், பூசணிக்காய் உடைத்து பூஜை செய்தனர்.