/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி நுாலகங்களில் ஓவிய பயிற்சி முகாம்
/
புதுச்சேரி நுாலகங்களில் ஓவிய பயிற்சி முகாம்
ADDED : மே 15, 2024 01:08 AM

புதுச்சேரி : சிறுவர்களுக்கு புதுச்சேரி கலை, பண்பாட்டு துறை நுாலகங்களில் ஓவிய பயிற்சி முகாம் நடந்தது.
கோடை விடுமுறையில் சிறுவர், சிறுமியர் பெரும்பாலான நேரத்தை டி.வி., மொபைல் போனில் செலவிடுவதும், புத்தகம் வாசிப்பு மற்றும் வெளியில் சென்று விளையாடுவது குறைந்து வருவது பெற்றோரை கவலையடைய செய்துள்ளது.
இதனை போக்கும் விதத்தில் சிறார்களை நுாலகத்திற்கு வரவைத்து நுால்களை படிக்க வைக்கவும், உள் விளையாட்டுகளில் ஈடுபட விளையாட்டு உபகரணங்களுடன் கிளை நுாலகங்களில் சிறுவர் நுாலகத்தை புதுச்சேரி கலை, பண்பாட்டு துறை வடிவமைத்துள்ளது.
அதையொட்டி புதுச்சேரியில் உள்ள 54 கிளை அரசு நுாலகங்களில் இயங்கும் சிறுவர் நுாலகத்தில் இலவச ஓவிய பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது.
அதன்படி, பாக்கமுடையான்பட்டு கிளை நுாலகத்தில் நடந்த இலவச ஓவிய பயிற்சி முகாமை இயக்குனர் கலியபெருமாள் துவக்கி வைத்து, மாணவர்களுக்கு பென்சில், ரப்பர், பேப்பர் ஆகியவை வழங்கினார். 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று ஓவிய பயிற்சி பெற்றனர்.

