
தன்னம்பிக்கை நிகழ்ச்சி
இந்த நிகழ்ச்சி, மாணவர்களுக்கு மிகப்பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இங்கு வருவதற்கு முன் சென்டாக் கவுன்சிலிங் நடைமுறைகள் குறித்து ஏகப்பட்ட குழப்பங்கள் இருந்தது. தற்போது அனைத்து சந்தேகங்களுக்கும் தெளிவான விடை கிடைத்துள்ளது.
கல்வி மட்டுமின்றி, தன்னம்பிக்கையை விதைக்கும் வல்லுநர்களின் பேச்சுகள், மாணவர்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தையும், உத்வேகத்தையும் அளிக்கிறது. இந்நிகழ்ச்சியில், மாணவர்கள் மட்டுமின்றி, பெற்றோரும் கலந்து கொள்ள வேண்டும். அப்போது தான், பிள்ளைகளுக்கு அவர்களால், நல்ல முறையில் வழி காட்ட முடியும்.
சுஜாதா, புதுச்சேரி.
எதிர்காலத்தை திட்டமிட உதவிக்கரம் நீட்டும் நிகழ்ச்சி
பொறியியல், மருத்துவம், கலை அறிவியல் படிப்புகள் தவிர பிற படிப்புகள் குறித்த விழிப்புணர்வு இல்லாத நிலை இன்றைக்கு மாறி இருக்கிறது . வழிகாட்டி போன்ற நிகழ்ச்சிகள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளன.
எனது மகனுக்கு இன்ஜினியரிங் படிக்க ஆசை. ஆனால், அதில் எந்த பிரிவை தேர்ந்தெடுப்பது என்பதில் குழப்பம் இருந்தது. இங்கு வந்தால் தெளிவு கிடைக்கும் என்பதால் இங்கு வந்தோம். அதேபோல, பொறியியல் துறையில் உள்ள அனைத்து பிரிவுகளையும், வல்லுநர்கள் மிக நுணுக்கமாக விவரித்தனர். அதனால் சுற்றுச்சூழல் குறித்த பொறியியல் பிரிவை தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளோம். இன்னும் பிற படிப்புகள், வேலைவாய்ப்புகள் குறித்த தகவல்களை தெரிந்து கொண்டு, முடிவு எடுக்கலாம் என நினைக்கிறோம். இது, மாணவர்களின் எதிர்காலத்தை திட்டமிட, உதவிக்கரம் நீட்டும், மிகவும் பயனுள்ள நிகழ்ச்சி.
முத்துமணி, விழுப்புரம்.
மாணவர்களை ஊக்கப்படுத்தும் நிகழ்ச்சி
இங்கு வருவதற்கு முன்பு வரை, படிப்புகள் மற்றும் கல்லுாரிகள் குறித்து, பெரிய அளவில், திட்டமிடல் கிடையாது. ஆனால், இங்கு வந்த உடன், எத்தனை வித துறைகள் இருக்கின்றன என்பது குறித்து தெளிவாக புரிந்தது. அதுமட்டுமில்லாமல், அதை படித்தால், கிடைக்கும் வேலை வாய்ப்புகள் பற்றியும் தெரிந்து கொண்டோம்.
இந்நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு வழங்கப்படும், பரிசுகள் அவர்களை ஊக்கப்படுத்துவதாக அமைந்துள்ளது. வல்லுநர்களோடு மாணவர்கள் கலந்துரையாட வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பது எனது கருத்து.
ரங்கநாதன், கடலுார்.

