ADDED : ஏப் 18, 2024 11:46 PM

புதுச்சேரி : மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு சென்று, ஓட்டுச்சாவடிகளில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
புதுச்சேரி லோக்சபா தேர்தலில் மொத்தமுள்ள 967 ஓட்டுச்சாவடிகளில் பயன்படுத்த 2,587 பேலட் யூனிட், 1,254 கன்ட்ரோல் யூனிட்,1323 விவிபாட் இயந்திரங்கள் கலப்பு முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
இவற்றில் 1934 பேலட் யூனிட்,967 கன்ட்ரோல் யூனிட், 967 விவிபாட் இயந்திரங்கள் ஒட்டுப்பதிவிற்கு பயன்படுத்தப்படுகின்றன. 653 பேலட் யூனிட், 287 கன்ட்ரோல் யூனிட்,356 விவிபாட் இயந்திரங்கள் ரிசர்வாக வைக்கப்பட்டுள்ளன.
ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் நேற்று மதியம் 12:00 மணி முதல் ஜி.பி.எஸ்., பொருத்திய வாகனங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன.
புதுச்சேரி பிராந்தியத்தில், லாஸ்பேட்டை மகளிர் அரசு பொறியல் கல்லுாரி வளாகத்தில் வைக்கப்பட்டு இருந்த ஓட்டு பதிவு இயந்திரங்கள் மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் முன்னிலையில் அனுப்பி வைக்கப்பட்டன. காரைக்காலில் மாவட்ட தேர்தல் அதிகாரி மணிகண்டன், மாகி, ஏனாமில் மண்டல நிர்வாகிகள் முன்னிலையில் ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் ஓட்டுச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்டன. அழியாத மை, பேனா, நுால் உள்ளிட்ட பொருட்கள் ஓட்டுப் பதிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
மாலை 4:00 மணியளவில் ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் ஓட்டுச்சாவடிகளில் நிறுவப்பட்டு, தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. ஓட்டுச்சாவடி கண்காணிப்பு பணிகளில் 1,600 போலீசார், பாதுகாப்பு பணியில் 3 ஆயிரம் போலீசார் ஈடுபடுகின்றனர்.
தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 12 கம்பெனி துணை ராணுவப்படை வந்துள்ளனர்.
பதற்றமான ஓட்டுச்சாவடிகளில் கூடுதல் துணை ராணுவனத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

