ADDED : ஆக 05, 2026 08:31 PM

புதுச்சேரி: மேட்டுப்பாளையத்தில் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் தனியார் பள்ளியின் பிளஸ் 1 மாணவி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
புதுச்சேரி, தர்மாபுரி அங்காளம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அசோக்குமார், சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவரது மகள் அஸ்வதி, 16; மூலக்குளம் தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார்.
இவர், நேற்று மாலை பள்ளி முடிந்து 4:30 மணிக்கு தனது எலக்ட்ரிக் சைக்கிளில், மேட்டுப்பாளையம் ஐ.டி.ஐ., எதிரே உள்ள பாட்டி வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டை செல்லும் சாலை ஐ.டி.ஐ., ஏதிரே பாட்டி வீட்டிற்கு செல்ல சைக்கிளில் திரும்ப முயன்றபோது, பின்னால் வந்த லாரி (டி.என் 24 எம் 1032) சைக்கிள் மீது மோதியது.
இதில், நிலை தடுமாறி கீழே விழுந்த அஸ்வதியின் தலை மீது லாரி சக்கரம் ஏறி, இறங்கியதில் சம்பவ இடத்திலேயே இறந்தார். லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
தகவலறிந்த வடக்கு போக்குவரத்து இன்ஸ்பெக்டர் வேலையன், சப் இன்ஸ்பெக்டர் பாலசந்தர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனர்.
உறவினர்கள் சாலை மறியல்:: அதற்கு, மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்து மொபைல் போனில் பேசியபடி ஆஜாக்ரதையாக வாகனத்தை இயக்கி விபத்து ஏற்படுத்திய டிரைவரை கைது செய்த பிறகே மாணவியின் உடலை மருத்துவமனைக்கு எடுக்க செல்ல விடுவோம் எனக் கூறி, திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி சமாதானம் செய்து, மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வடக்கு போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து, விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவர் பெரம்பலுாரைச் சேர்ந்த முகமது ஆஷிக் என்பவரை தேடி வருகின்றனர்.
