கடலுார் மாவட்டத்தில் பா.ம.க., செல்வாக்கு சரிவு சட்டசபை தேர்தலில் எட்டாக்கனியாகும் வெற்றி
கடலுார் மாவட்டத்தில் பா.ம.க., செல்வாக்கு சரிவு சட்டசபை தேர்தலில் எட்டாக்கனியாகும் வெற்றி
ADDED : மே 06, 2026 10:31 PM
கடலுார்: கடலுார் மாவட்டத்தில், கடந்த நான்கு சட்டசபை தேர்தல்களில், ஒரு தொகுதியில் கூட பா.ம.க., வெற்றிபெற முடியாததால் அக்கட்சி செல்வாக்கை இழந்து வருகிறதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழகத்தின் வட மாவட்டங்களில் பெரும்பான்மையாக உள்ள வன்னியர் சமூக மக்களின் முன்னேற்றத்திற்காக, டாக்டர் ராமதாஸ் கடந்த, 1989ம் ஆண்டு பாட்டாளி மக்கள் கட்சியை துவக்கினார். கடந்த, 1991ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் முதன் முதலாக போட்டியிட்ட பா.ம.க., கடலுார் மாவட்டத்திலுள்ள, 9 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியது. அதில் பண்ருட்டி தொகுதியில் முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரன் வெற்றிபெற்றார். அப்போதைய பா.ம.க.,வின் சின்னமான யானையில் அமர வைத்து அவரை சட்டசபைக்கு அனுப்பினர்.
அதன்பின் 1996ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், மாவட்டத்தில், 6 தொகுதியில் போட்டியிட்ட பா.ம.க., புவனகிரி, விருத்தாசலம் தொகுதியில், 2ம் இடத்தை பிடித்தது. 2001ம் ஆண்டு, சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணியில் இணைந்து மாவட்டத்தில், 3 தொகுதிகளில், போட்டியிட்டு பண்ருட்டி, விருத்தாசலம் தொகுதிகளை கைப்பற்றியது.
2006 தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் இணைந்து மாவட்டத்தில், 3 தொகுதிகளில் போட்டியிட்டு பண்ருட்டி தொகுதியை தக்க வைத்தது. விருத்தாசலம் தொகுதியை தே.மு.தி.க.,வின் விஜயகாந்திடம் பறிகொடுத்தது. 2011 தேர்தலிலும் தி.மு.க., கூட்டணியிலேயே நீடித்த பா.ம.க., புவனகிரி மற்றும் புதியதாக உருவாக்கப்பட்ட நெய்வேலி தொகுதியில் போட்டியிட்டு, 2ம் இடத்தைப் பிடித்தது.
அதன்பின் 2016 ம் ஆண்டு தேர்தலில் தனித்து களம் கண்ட பா.ம.க., 9 தொகுதிகளிலும், வேட்பாளர்களை நிறுத்தியது. அதில், 5 தொகுதிகளில், மூன்றாமிடத்தையும், 4 தொகுதிகளில், நான்காமிடத்தையும் மட்டுமே பிடிக்க முடிந்தது. கடந்த, 2021ல் அ.தி.மு.க., கூட்டணிக்கு திரும்பிய பா.ம.க., நெய்வேலியில், 977 ஓட்டுகள் வித்தியாசத்திலும், விருத்தசாலத்தில் 862 ஓட்டுகள் வித்தியாசத்திலும் வெற்றியை பறிகொடுத்தது.
2026 சட்டசபை தேர்தலுக்கு முன்பாக கட்சிக்குள் உட்கட்சி பூசல் வெடித்தது. இதனால் பா.ம.க.,வின் நிலை என்னவாகும் என எதிர்பார்த்த நிலையில், அன்புமணி தலைமையிலான பா.ம.க., சட்டசபை தேர்தலை அ.தி.மு.க., கூட்டணியில் இணைந்து எதிர்கொண்டது. மாவட்டத்தில் விருத்தாசலம், காட்டுமன்னார்கோவிலில் களம் கண்ட பா.ம.க., விருத்தாசலத்தில் 3ம் இடம், காட்டுமன்னார்கோவிலில், 2ம் இடத்தை பிடித்து தோல்வியை தழுவியது.
கடலுார் மாவட்டத்திலிருந்து முதல் எம்.எல்.ஏ.,வை சட்டசபைக்கு அனுப்பிய பா.ம.க.,விற்கு, கடந்த நான்கு சட்டசபை தேர்தலில் வெற்றி என்பது எட்டாக்கனியாகவே உள்ளது. லோக்சபா தேர்தலிலும், கடலுார் மாவட்டத்தில் வெற்றிபெற முடியாமல் பா.ம.க., திணறி வருகிறது.
வன்னியர்கள் பெரும்பான்மையாக உள்ள கடலுார் மாவட்டத்தில், தொடர்ந்து பா.ம.க., பின்னடைவை சந்தித்து வருவது அக்கட்சி செல்வாக்கை இழந்து வருகிறதா என்ற சந்தேகத்தை உருவாக்கி உள்ளது.
