ADDED : ஏப் 12, 2024 04:31 AM

திருக்கனுார் : கொடாத்துாரில் பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு, சென்ற மாணவரை காணவில்லை என தாய் போலீசில் புகார் அளித்துள்ளார்.
திருக்கனுார் அடுத்த கொடாத்துார் புதுநகரைச் சேர்ந்தவர் சுரேஷ், கூலி தொழிலாளி. இவரது மகன் ரெனித்குமார், 13; திருக்கனுாரில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.
கடந்த சில நாட்களாக வீட்டில் இருந்து பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற ரெனித்குமார், வகுப்பறைக்கு வராமல் வெளியே சுற்றி வந்துள்ளார்.
இதையடுத்து, அவரது தாய் கோவிந்தம்மாள் நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்று மகன் வகுப்பறையில் உள்ளாரா என்று விசாரித்துள்ளார்.
இதையறிந்த ரெனித்குமார் மீண்டும் வீட்டிற்கு சென்றால் தாய் கண்டிப்பார் என்பதால், நேற்று முன்தினம் முதல் இதுவரை வீடு திரும்பவில்லை.
இது குறித்து கோவிந்தம்மாள் அளித்த புகாரின் பேரில் திருக்கனுார் போலீசார் வழக்குப் பதிந்து ரெனித்குமாரை தேடி வருகின்றனர்.
இவரைப் பற்றி தகவல் தெரிந்தவர்கள் திருக்கனுார் போலீஸ் ஸ்டேஷன் 0413-2688435 தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

