/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க பெயரை கெடுப்பதை ஏற்க முடியாது' திட்ட இயக்குனர் திட்டவட்டம்
/
'எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க பெயரை கெடுப்பதை ஏற்க முடியாது' திட்ட இயக்குனர் திட்டவட்டம்
'எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க பெயரை கெடுப்பதை ஏற்க முடியாது' திட்ட இயக்குனர் திட்டவட்டம்
'எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க பெயரை கெடுப்பதை ஏற்க முடியாது' திட்ட இயக்குனர் திட்டவட்டம்
ADDED : ஜூன் 26, 2024 07:31 AM
புதுச்சேரி, : அதிகாரிகள் மீது, வீண் பழி சுமத்தி, புதுச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் பெயரை கெடுப்பதை ஏற்க முடியாது என, திட்ட இயக்குனர் சித்ராதேவி தெரிவித்தார்.
அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு;
எச்.ஐ.வி., எய்ட்ஸ் தடுப்பு பணியின் ஒரு பகுதியாக, நான்கு தொண்டு நிறுவனங்கள் மற்றும் ஒரு சமுதாயம் சார்ந்த தொண்டு அமைப்பிற்கு, எச்.ஐ.வி., எய்ட்ஸ் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிக்காக நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது.
குறிப்பிட்ட ஒரு சமுதாயம் சார்ந்த தொண்டு அமைப்பு, எச்.ஐ.வி., எய்ட்ஸ் தடுப்பு சேவை பணியில் இருந்து தானாக முன் வந்து விலகி கொள்வதாக, கடந்த மார்ச்சில், கடிதம் கொடுத்தது.
அதில், புதுச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க ஊழியர்களால், தங்களின் தொண்டு அமைப்பு ஊழியர்கள் சரி வர நடத்தப்படவில்லை, பாகுபாடு கட்டப்படுகிறது என, சுட்டிக்காட்டியது.
இதைத்தொடர்ந்து, சுகாதாரத்துறை இயக்குனரின் அறிவுறுத்தலில், சங்கத்தின் அனைத்து அலுவலர்கள் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு, குறிப்பிட்ட தொண்டு அமைப்பினால் சொல்லப்பட்ட குற்றச்சாட்டில் உண்மை எதுவும் இல்லை என, நிருபிக்கப்பட்டது. மேலும், தொண்டு நிறுவன பொறுப்பு அதிகாரியும், மேற்கூறிய குற்றச்சாட்டு அனைத்தும் உண்மை இல்லாதது என்று உறுதி அளித்துள்ளார்.
இதனை தொடர்ந்து, அரசு சுகாதார செயலர் அறிவுறுத்தல்படி, சுகாதார இயக்குனர் அலுவலகத்தில் தேதி குறிப்பிட்டு சம்மந்தப்பட்ட தொண்டு நிறுவன பொறுப்பாளரை, நேரில் அழைத்து விசாரணை செய்து, அரசுக்கு கோப்பு சமர்ப்பிக்கப்பட்டது.
குறிப்பிட்ட சமுதாயம் சார்ந்த தொண்டு அமைப்பு எச்.ஐ.வி., எய்ட்ஸ் தடுப்பு சேவை பணியில் இருந்து தானாக முன் வந்து விலகி கொள்வதை ஏற்று கடிதம் அனுப்பப்பட்டது. கடந்த, 12 ஆண்டுகளாக, புதுச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்துடன் இணைந்து செயல்பட்டு வரும் நிலையில், எந்த விதமான புகார்களும் இதுவரையில், தெரிவிக்கவில்லை.
கடந்த மார்ச்சில் நடந்த, தொண்டு நிறுவனங்களுக்கான கூட்டத்தில், திட்ட மதிப்பீட்டு காலத்திற்கு அப்பாற்பட்ட புகைப்படத்தை சமர்ப்பித்ததை, சுட்டிக்காட்டியதற்கும், ஏற்கனவே ஒருமுறை முறையான செலவு கணக்கு ரசீதை கேட்டதற்கும், அதிகாரிகள் மீது, வீண் பழி சுமத்தி, புதுச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் பெயரை கெடுப்பதை, ஏற்கமுடியாது.
எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் இரண்டு அதிகாரிகளுக்கு அவப்பெயர் உருவாக்கி ஆதாரமற்ற குற்றங்களை சுமத்துவது நியாயமற்றது.
புதுச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் மூலம் நடத்தப்படும், அனைத்து பணி நியமனங்களும், தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாடு நிறுவனத்தின் பணி நியமன விதிமுறைப்படியும் மற்றும் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாடு நிறுவனத்தின் பிரதிநிதி முன்னிலையிலேயே, நடைபெற்று அரசின் ஒப்புதலோடு நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.