/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பிறந்த நாள் பேனர்களால் பொதுமக்கள் எரிச்சல்
/
பிறந்த நாள் பேனர்களால் பொதுமக்கள் எரிச்சல்
ADDED : ஜூலை 29, 2024 06:31 AM
புதுச்சேரி : தனது பிறந்த நாளுக்கு போக்குவரத்திற்கு இடையூராக, பொதுமக்கள் முகம் சுளிக்கும் வகையில் பேனர்கள் வைக்க வேண்டாம் என, ஆதரவாளர்களுக்கு முதல்வர் ரங்கசாமி அறிவுறுத்த வேண்டும்.
புதுச்சேரியின் சாலைகள், சிக்னல்கள், முக்கிய ரவுண்டானாக்களில் வாகனங்கள் செல்ல முடியாத வகையில், பேனர்கள் கண்டமேனிக்கும் முகம் சுளிக்கும் வகையில் வைக்கப்படுகின்றன. இதனால் வாகனங்களில் செல்வோர் தட்டுத்தடுமாறி செல்லும் நிலை ஏற்படுகிறது.
பேனர்களால் உயிரிழப்பு சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. அப்படி இருந்தும் கூட, பேனர் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படவில்லை.
கோர்ட் தலையிட்ட பிறகு தான் தற்போது ஓரளவு பேனர்கள் வைப்பது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சட்ட விரோதமாக பேனர்கள் வைப்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படுகிறது. இது போன்ற சூழ்நிலையில், முதல்வர் பிறந்தநாளையொட்டி அவரது ஆதரவாளர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் நகரெங்கும் சட்ட விரோதமாக அனுமதி இல்லாமல் பேனர்கள் வைப்பதற்காக தயாராகி வருகின்றனர்.
மற்றவர்களுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டியவர்கள் முதல்வரின் ஆதரவாளர்கள் தான். எனவே பொதுமக்கள் முகம் சுளிக்கும் வகையில் பேனர் வைக்க வேண்டுமா எனபதைஅவர்கள் யோசிக்க வேண்டும்.
பேனர்கள் வைப்பதை உள்ளாட்சி துறை முறைப்படுத்த துவங்கியுள்ளது. எனவே, அப்படியே முதல்வருக்காக பேனர்கள் வைப்பதாக இருந்தால், சட்டப்படி நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து அமைப்புகளிடம் அனுமதி பெற்று வைக்கலாம்.
அனுமதி இல்லாமல் பேனர்கள் வைத்தால், முதல்வரின் ஆதரவாளர்களை கையை காட்டி மற்றவர்களும் துணிச்சலாக கண்டமேனிக்கு சாலையில் பேனர்கள் வைப்பர்.
முதல்வருக்கே சட்ட விரோதமாக பேனர்கள் வைக்கும்போது, எதுவும் செய்ய முடியாமல் அதிகாரிகள் தர்ம சங்கடமான நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
சட்ட விரோத பேனர்கள் விஷயத்தில் மக்கள் பிரதிநிதிகள், மாநில மக்களுக்கு முன் உதாரணமாக முதல்வரே களம் இறங்க வேண்டும்.
தனது பிறந்த நாளுக்கு போக்குவரத்திற்கு இடையூராக பேனர்கள் வைக்க வேண்டாம் என, ஆதரவாளர்களுக்கு முதல்வர் ரங்கசாமி அறிவுறுத்த வேண்டும்.