/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி - நாகர்கோவில் அல்ட்ரா டீலக்ஸ் பஸ்: முதல் பயணத்திலே விபத்தில் சிக்கியது
/
புதுச்சேரி - நாகர்கோவில் அல்ட்ரா டீலக்ஸ் பஸ்: முதல் பயணத்திலே விபத்தில் சிக்கியது
புதுச்சேரி - நாகர்கோவில் அல்ட்ரா டீலக்ஸ் பஸ்: முதல் பயணத்திலே விபத்தில் சிக்கியது
புதுச்சேரி - நாகர்கோவில் அல்ட்ரா டீலக்ஸ் பஸ்: முதல் பயணத்திலே விபத்தில் சிக்கியது
ADDED : ஏப் 27, 2024 04:31 AM
புதுச்சேரி: புதுச்சேரி - நாகர்கோவிலுக்கு இயக்கப்பட்ட பி.ஆர்.டி.சி. அல்ட்ரா டீலக்ஸ் புதிய பஸ் முதல் பயணத்திலே விபத்தில் சிக்கியது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 3 புதிய பஸ்கள் சிறு சிறு விபத்தில் சிக்கி சேதம் ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசின் பழைய வாகன அழிப்பு கொள்கைப்படி, 15 ஆண்டுகள் பயன்பாட்டில் உள்ள அரசு வாகனங்கள் இயங்க தடை விதிக்கப்பட்டது. இதனால் புதுச்சேரி அரசின் போக்குவரத்து கழகமான பி.ஆர்.டி.சி.யில் 40க்கும் மேற்பட்ட பஸ்களை இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. புதுச்சேரி அரசு பி.ஆர்.டி.சி.க்கு, ரூ. 17.30 கோடி ஒதுக்கி, 38 புதிய பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டது.
இதன் மூலம் 20க்கும் மேற்பட்ட புதிய பஸ்கள் காரைக்கால், சென்னை, திருப்பதி, பெங்களூர், மாகி, நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்படுகின்றன.
கடந்த 24ம் தேதி புதுச்சேரி நாகர்கோவில் இடையே புதிய அல்ட்ரா டீலக்ஸ் பஸ் சேவை துவக்கி வைக்கப்பட்டது. ஒரு பஸ் புதுச்சேரியில் இருந்து புறப்படும், அதே நேரத்தில் நாகர்கோவிலில் இருந்து ஒரு பஸ் புறப்பட்டு புதுச்சேரி வரும் வகையில் 2 பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டது.
நேற்று முன்தினம் மாலை 2வது புதிய பஸ் புதுச்சேரியில் இருந்து பயணிகளுடன் நாகர்கோவில் புறப்பட்டது. நேற்று காலை திருநெல்வேலி அருகே சென்றபோது, பஸ் லாரி மீது மோதியது. இதில், புதிய பஸ்சின் இடபக்க டயர் வெடித்து சேதம் ஏற்பட்டது. பஸ்சில் இருந்த பயணிகள் வேறு பஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். பஸ் டயர் மாற்றப்பட்டு சேதங்கள் சரிசெய்து நேற்று மாலை பயணிகளுடன் பஸ் புறப்பட்டு புதுச்சேரி வந்தது. முதல் பயணத்திலே பி.ஆர்.டி.சி. பஸ் விபத்தில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஒரு வாரத்தில் மாகி, பெங்களூருக்கு இயக்கப்பட்ட புதிய பஸ்களும் சிறு சிறு விபத்துகளில் சிக்கி சேதம் ஏற்பட்டுள்ளது. சீனியர் டிரைவர்கள் அனைவரும் லோக்கல் டவுன் பஸ் ஓட்டுவதை அதிகம் விரும்புகின்றனர்.
நெடுந்துாரம் செல்லும் பஸ்களில் ஒப்பந்த அடிப்படையிலான ஜூனியர் டிரைவர்களை நியமிப்பதால், இதுபோன்ற விபத்து ஏற்படுவதாகவும், விபத்து ஏற்படுத்தும் டிரைவர்கள் மீது நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் அலட்சியத்துடன் பஸ் ஓட்டி விபத்து ஏற்படுத்துகின்றனர் என சக ஊழியர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

