/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி 'பட்ஜெட்': கட்சிகள் கருத்து
/
புதுச்சேரி 'பட்ஜெட்': கட்சிகள் கருத்து
ADDED : ஆக 03, 2024 11:53 PM

புதுச்சேரி பட்ஜெட் குறித்து அரசியல் கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன.
முன்னாள் முதல்வர் நாராயணசாமி: அலங்கார வார்த்தை நிரப்பி உள்ளது. மாநில வளர்ச்சிக்கு எந்த திட்டமும் இல்லை. கடன் சுமை கழுத்தை நெரிக்கும் நிலையில் மேலும் கடன் பெறுவது மாநில நிதி சுமையை அதிகரிக்கும். கடன் பெறுவது மாநில வளர்ச்சிக்கு உகந்தது அல்ல. அனைத்து தரப்பு மக்களையும் ஏமாற்றுகின்ற பட்ஜெட்.
தி.மு.க., அமைப்பாளர் சிவா: நீண்ட கால திட்டங்கள், தொழில் வளர்ச்சிக்கு எந்த அறிவிப்பும் இல்லை. ரேஷன் கடை திறந்து அரிசி மற்ற பொருள் வழங்குவது குறித்து தெளிவாக கூறிப்பிடவில்லை.
கடந்த பட்ஜெட்டில் அறிவித்த திட்டங்கள் மீண்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலை தீர்க்க புதிய மேம்பாலம், புறவழிச்சாலை என எந்த தொலைநோக்கு திட்டங்களும் இல்லை. எதிர்பார்ப்பு எதுவுமில்லாமல் ஏமாற்றம் தரும் பட்ஜெட்.
பா.ஜ., தலைவர் செல்வகணபதி எம்.பி.,: மாணவர்களுக்கு மாதம் ரூ. 1000 வழங்கும் திட்டம், தேர்வில் சிறப்பிடம் பிடிக்கும் மாணவர்களுக்கு பரிசு திட்டங்கள் பெரும் பயன்தர கூடியது. பெண்கள் சுயமாக பொருளாதார சக்தியாக உருவெடுக்க ரூ. 25 ஆயிரம் மானியத்துடன் திறன் பயிற்சி பெண்களுக்கு பெரிதும் உதவும். பெண்களுக்கு ரூ. 1,403 கோடி, இளைஞர்கள் வளர்ச்சிக்கு ரூ. 516 கோடி ஒதுக்கி உள்ளது பாராட்டிற்குரியது.
இந்திய கம்யூ., மாநில செயலாளர் சலீம்: பட்ஜெட்டில் மாநில சொந்த வருவாய், கடன், சம்பளம், பென்ஷன், வட்டி, ஒதுக்கியது போக மீதம் 6.42 சதவீதம் மட்டுமே இருப்பது கடும் நிதி நெருக்கடியை காட்டுகிறது. மத்திய பா.ஜ., அரசு புதுச்சேரிக்கு உரிய நிதி வழங்காமல் வஞ்சித்த பட்ஜெட்.
மக்கள் நீதி மய்யம் புதுச்சேரி பொதுசெயலாளர் சந்திரமோகன்: பட்ஜெட்டில் தொலைநோக்கு சிந்தனை இல்லை. மத்திய அரசிடம் கடன் தள்ளுபடி பெற்றிருந்தால் கூடுதல் நிதியுடன் தாக்கல் செய்யும் பட்ஜெட்டால் வளர்ச்சி ஏற்பட வாய்ப்பு உள்ளது. பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுடைய வாழ்வாதார உயர்விற்கு எந்த திட்டமும் இல்லை. அரசு பணியிடங்கள் நிரப்புவது தொடர்பான அறிவிப்பும் இல்லை.
புதுச்சேரி மக்கள் முன்னேற்ற கழக சேர்மன் வெங்கட்ராமன்: பட்ஜெட்டில் உண்மை இல்லை. குப்பை வரி ரத்து என அறிவித்து இதுவரை செயல் படுத்தவில்லை. குழந்தை பெயரில் ரூ. 50 ஆயிரம் செலுத்தும் திட்டம் கிடப்பில் உள்ளது. பெண்களுக்கான இலவச பஸ் பயணம் அறிவிப்பு, கோவில் சொத்து டிஜிட்டல் மயம் அனைத்தும் அறிவிப்புடன் உள்ளது. தொலைநோக்கு பார்வை இல்லாமல் தேர்தலை மையப்படுத்தி சுயநலமாக தயாரிக்கப்பட்ட பட்ஜெட்.