/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி டாக்டர்கள் தொடர் போராட்டம் புறநோயாளிகள் பாதிக்கும் அபாயம்
/
புதுச்சேரி டாக்டர்கள் தொடர் போராட்டம் புறநோயாளிகள் பாதிக்கும் அபாயம்
புதுச்சேரி டாக்டர்கள் தொடர் போராட்டம் புறநோயாளிகள் பாதிக்கும் அபாயம்
புதுச்சேரி டாக்டர்கள் தொடர் போராட்டம் புறநோயாளிகள் பாதிக்கும் அபாயம்
ADDED : ஆக 18, 2024 11:26 PM

புதுச்சேரி: மருத்துவ பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வர கோரி புதுச்சேரியில் டாக்டர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், இன்று முதல் கடும் பாதிப்பு ஏற்படும்.
மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டா மருத்துவமனை வளாகத்தில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை கண்டித்து நாடு முழுதும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய கோரி, நாடு முழுதும் மருத்துவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி புதுச்சேரியில் ஜிப்மர் மருத்துவமனையில் காலவரையற்ற தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அரசு மருத்துவமனை, அரசு மருத்துவ கல்லுாரி டாக்டர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவசர சிகிச்சை, பிரசவம், ஆய்வகம், கேன்சர் சிகிச்சை உள்ளிட்ட முக்கிய சிகிச்சைகள் மட்டுமே நடந்து வருகிறது.
புற நோயாளிகள் பிரிவுகள் வெறிச்சோடி கிடக்கிறது. நேற்று ஜிப்மர் மருத்துவமனை டாக்டர்கள், பாலியல் சீண்டல்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். துண்டு பிரசுரங்களை விநியோகித்தனர். ஜிப்மர் மைதானத்தில் மனித சங்கிலியாக அணி வகுத்து, மருத்துவ பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வரக் கோரி கோஷம் எழுப்பினர்.
இன்று 19ம் தேதி முதல் டாக்டர்கள் போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளதால் புறநோயாளி சிகிச்சை பிரிவு கடும் பாதிப்பிற்குள்ளாகும்.
தொடர் விடுமுறை காரணமாக, கடந்த 15ம் தேதி முதல் ஜிப்மர் உள்ளிட்ட அனைத்து மருத்துவமனை புறநோயாளி பிரிவுகளுக்கும் குறைந்த எண்ணிக்கையில் நோயாளிகள் வந்தனர். இதனால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. தொடர் விடுமுறை இல்லாத காலங்களில் வழக்கமாக திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை புறநோயாளிகள் பிரிவில் கூட்டம் அலை மோதும். இன்று முதல் கடும் பாதிப்பு இருக்கும்.
எனவே புறநோயாளிகள் பாதிக்காத வகையில் மாற்று ஏற்பாடுகளை புதுச்சேரி அரசு மேற்கொள்ள வேண்டும்.