கொல்லைப்புற பணி நியமனங்களுக்கு தடை புதுச்சேரி அரசு அதிரடி உத்தரவு
கொல்லைப்புற பணி நியமனங்களுக்கு தடை புதுச்சேரி அரசு அதிரடி உத்தரவு
ADDED : ஜூலை 02, 2026 06:51 PM
புதுச்சேரி: அரசுத் துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், தன்னாட்சி அமைப்புகளில் விதிமுறைகளை மீறி கொல்லைப்புறமாக ஆட்களை நியமித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, புதுச்சேரி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
புதுச்சேரியில் எந்த ஆட்சி நடந்தாலும் கொல்லைப்புற நியமனம் தொடர்கதையாகி வந்தது. வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களுக்கு வேலை கொடுக்காமல், கட்சிக்காரர்கள், அவர்களது ஆதரவாளர்களுக்கு அரசு வேலைகளை வாரி கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், புதுச்சேரி அரசுத் துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், தன்னாட்சி அமைப்புகளில் இந்த கொல்லைப்புற நியமனங்கள் செய்ய தடை விதித்து நிர்வாக சீர்திருத்த துறை அனுப்பியுள்ள அவசர சுற்றிக்கை:
புதுச்சேரியில் பொதுப்பணி நியமனங்கள் அனைத்தும் அரசியலமைப்பு சட்டத்தின் படியும், நடைமுறையில் உள்ள பணி விதிகளின்படியும் மட்டுமே மேற்கொள்ள சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. தகுதியுள்ள விண்ணப்பதாரர்களின் வேலைவாய்ப்பு உரிமையை பாதிக்கும் வகையில், விதிமுறைகளை மீறி மேற்கொள்ளப்படும் எந்தவொரு கொல்லைப்புற நியமனங்களையும், நிரந்தரமாக்கலையும் ஏற்க முடியாது எனவும், நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே, புதுச்சேரி அரசின் அனைத்து பொதுப்பணி நியமனங்களும் முறையாக அறிவிக்கப்பட்ட பணி விதிகளின்படியும், அரசியலமைப்புச் சட்டத்தின்படியும் மட்டுமே நடைபெற வேண்டும்.
அரசுப் பணிக்கான நியமனங்கள் அனைத்தும் வழக்கமான காலிப் பணியிடங்களுக்கு மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும். இந்த உத்தரவுகளை செயல்படுத்துவதில் எந்தவித சுணக்கமும் இருக்கக்கூடாது. பணி நியமனங்கள் தொடர்பான கோப்புகளைக் கையாளும் அதிகாரிகள், இந்த நடைமுறைகள் சரியாகப் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டிய தனிப்பட்ட பொறுப்பு அவர்களுக்கு உண்டு.
முறைகேடான நியமனங்களில் ஈடுபடுவது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசுத் துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தன்னாட்சி பெற்ற அமைப்புகளின் தலைவர்கள் அனைவரும், புதிய நியமனங்கள் தொடர்பான எந்தவொரு கோப்பையும் கையாளும் போது, அரசின் முந்தைய சுற்றறிக்கைகள் மற்றும் இந்த புதிய உத்தரவுகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
காரணம் என்ன?: கொல்லைப்புற நியமனம் தொடர்பாக பொதுப்பணித் துறை வாரிசுதாரர்கள் சங்கம் சார்பில், 10 பேர் ஐகோர்ட்டில் கடந்த 2023ம் ஆண்டு நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு கடந்த ஜனவரியில் விசாரணைக்கு வந்தபோது, இனி எந்தவொரு பின்வாசல் நியமனங்களும் செய்யப்பட மாட்டாது என, புதுச்சேரி அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது.
அப்போது நீதிபதிகள், புதுச்சேரி அரசு இனிவரும் காலங்களில், பொது வேலைவாய்ப்புகள் அனைத்தும் பணி விதிகள் மற்றும் அரசியலமைப்பு நியமனத் திட்டத்தின்படி கண்டிப்பாக மேற்கொள்வதை உறுதி செய்ய, அனைத்து தகுதியுள்ள அதிகாரிகளுக்கும் தேவையான சுற்றறிக்கை வெளியிட வேண்டும். யாராவது முறையற்ற நியமனம் செய்தால், அதனால் பாதிக்கப்பட்ட நபர் தகுந்த நடவடிக்கை எடுக்கக் கோரி அரசை அணுகலாம் என, தெரிவித்து, வழக்கினை முடித்து வைத்தனர். அதையடுத்தே அதிரடியாக அனைத்து துறைகளுக்கும் சுற்றிக்கை அனுப்பி நிர்வாக சீர்த்திருத்த துறை எச்சரித்துள்ளது.
