/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் உயர்கல்வி பயில 15 ஆயிரம் இடங்கள் உள்ளன; தொழில்நுட்ப பல்கலை பேராசிரியர் அழகுமூர்த்தி தகவல்
/
புதுச்சேரியில் உயர்கல்வி பயில 15 ஆயிரம் இடங்கள் உள்ளன; தொழில்நுட்ப பல்கலை பேராசிரியர் அழகுமூர்த்தி தகவல்
புதுச்சேரியில் உயர்கல்வி பயில 15 ஆயிரம் இடங்கள் உள்ளன; தொழில்நுட்ப பல்கலை பேராசிரியர் அழகுமூர்த்தி தகவல்
புதுச்சேரியில் உயர்கல்வி பயில 15 ஆயிரம் இடங்கள் உள்ளன; தொழில்நுட்ப பல்கலை பேராசிரியர் அழகுமூர்த்தி தகவல்
ADDED : மார் 31, 2024 04:29 AM

புதுச்சேரி, : புதுச்சேரியில் உயர்கல்வி பயில 15 ஆயிரம் இடங்கள் கொட்டி கிடக்கிறது. இடங்களை நிரப்பதான் ஆள் இல்லை என பேராசிரியர் அழகுமூர்த்தி பேசினார்.
புதுச்சேரியில் நடைபெற்று வரும் 'தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சியின் இரண்டாம் நாளான நேற்று நடந்த கருத்தரங்கில், சென்டாக் கவுன்சிலிங் நடைமுறைகள் குறித்து புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறை பேராசிரியர் அழகுமூர்த்தி பேசியதாவது;
புதுச்சேரி ஒரு கல்வி கேந்திரம். இங்கு எல்லா படிப்புகளும் உள்ளது. 40 முதல் 50 கோர்ஸ்களுடன், 120 அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில், 11,000 சீட்கள் உள்ளது. மேலும், பல்கலைக் கழகங்களில் உள்ள 4,000 சீட் சேர்த்தால் மொத்தம் 15,000 சீட் உள்ளது. இதில், 85 சதவீத இடங்கள் புதுச்சேரி மாநில மாணவர்களுக்கும், 15 சதவீதம் வெளிமாநில மாணவர்கள் கல்வி பயில முடியும். ஆனால், மாநிலத்தில் பிளஸ் 2 முடிப்போர் எண்ணிக்கை 8 ஆயிரம் முதல் 9 ஆயிரம் மட்டுமே. மாணவர்கள் பற்றாக்குறை உள்ளது. நீட் பாட பிரிவுகள் தவிர மற்ற பாட பிரிவுகள் எடுக்க ஆள் இல்லை.
சென்டாக் ஒரே குடையின் கீழ் இயங்கும் சேர்க்கை வழங்கும் குழு. எம்.பி.பி.எஸ்., பி.டெக்., பி.இ., கலை அறிவியல் பி.காம், கால்நடை மருத்துவம், பாலிடெக்னிக், சட்டம், ஆசிரியர் பயிற்சி என அனைத்து பாட பிரிவுக்கும் மாணவர் சேர்க்கை நடத்துகிறது.
சென்டாக் சேர்க்கை தொடர்பான தகவல்களும், நீட் படிப்பு, நீட் அல்லாத படிப்பு உள்ளிட்டவை தனித்தனியாக 4 விதமான குறிப்பேடு (புரோச்சர்) உள்ளது. பிளஸ் 2 ரிசல்ட் வெளியான மறு நாளில் இருந்து ஆன்லைன் விண்ணப்பிக்க துவங்கி விடும்.
புதுச்சேரி மாணவர்கள் வெளிமாநிலத்தில் உள்ள அரசு ஆயுஷ் மருத்துவமனை, சித்தா, ஹோமியோபதி படிக்க, டி.டி.எட்., பி.எட்., படிக்கவும் சென்டாக்கில் சேர்க்கை பெற்று தருகிறது. சிறுபான்மை மருத்துவ கல்லுாரியில் எம்.பி.பி.எஸ்., இடங்களை நிரப்பும் பணியையும் சென்டாக் செய்கிறது. சென்டாக்கில் விண்ணப்பிக்க 5 ஆண்டு குடியிருந்த சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்.
கடந்த 2023-24ம் ஆண்டு குறிப்பேட்டில் எந்த மாற்றமும் இருக்காது. அதை டவுன்லோடு செய்து பார்த்தால் தகவல் அனைத்தும் தெரிந்து கொள்ள முடியும். விண்ணப்பிப்பது எப்போது, முதல் கவுன்சிலிங், பாட பிரிவுகளுக்கு மெரிட் லிஸ்ட், கட்ஆப் தெரிந்து கொள்ள முடியும். விண்ணப்பிக்கும்போது மாணவர்களுக்கு ஒரு மொபைல் நம்பர், இமெயில் ஐ.டி. உருவாக்கி கொள்ளுங்கள். குறைந்தபட்சம் 17 வயது பூர்த்தி ஆகி இருக்க வேண்டும்.
குடியுரிமை, நாட்டுரிமை, மாற்றுத்திறனாளி, விடுதலை போராட்ட வீரர், முன்னாள் ராணுவம் உள்ளிட்ட சான்றிதழ்களை பெற்று வைத்து கொண்டால் எளிதாக இருக்கும். அதன் மூலம் இடஒதுக்கீடு பெற முடியும். கலை அறிவியல் படிப்பில் கிராமப்புற மாணவர்களுக்கு தனி வாய்ப்பு உள்ளது.
அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு மருத்துவம், பல் மருத்துவம், ஆயுர்வேத மருத்துவ படிப்புகளுக்கு வழங்கப்படுகிறது. அதற்கான சான்றிதழ்களை தயார் செய்த கொள்ளுங்கள்.
புதுச்சேரி மற்றும் பிற மாநில மாணவர்களுக்காக 1,800 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளது. நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவம், பல் மருத்துவம், ஆயுர்வேதத்திற்கு கவுன்சிலிங் நடக்கும். அடுத்ததாக கலை அறிவியல் பாட பிரிவுகளுக்கு கவுன்சிலிங் நடத்தப்படும்.
மே 6ம் தேதி முதல் சென்டாக் இணையதளத்தையும், 'தினமலர்' நாளிதழை கவனித்து வாருங்கள். அதில் கவுன்சிலிங் தொடர்பான தகவல்கள் தொடர்ந்து வெளியாகும். புதுச்சேரி பல்கலைக்கழகம், ராட்ரியரக்ஷியா பல்கலைக்கழகம், ஜிப்மர் கல்லுாரியிலும் ஏராளமான பாட வாய்ப்புகள் உள்ளது. அதற்கும் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.

