/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
திருத்தப்பட்ட கடற்கரை மண்டல மேலாண்மை திட்டம்... வெளியீடு; அடுத்த மாதம் 22ல் கருத்துகேட்பு கூட்டத்திற்கு ஏற்பாடு
/
திருத்தப்பட்ட கடற்கரை மண்டல மேலாண்மை திட்டம்... வெளியீடு; அடுத்த மாதம் 22ல் கருத்துகேட்பு கூட்டத்திற்கு ஏற்பாடு
திருத்தப்பட்ட கடற்கரை மண்டல மேலாண்மை திட்டம்... வெளியீடு; அடுத்த மாதம் 22ல் கருத்துகேட்பு கூட்டத்திற்கு ஏற்பாடு
திருத்தப்பட்ட கடற்கரை மண்டல மேலாண்மை திட்டம்... வெளியீடு; அடுத்த மாதம் 22ல் கருத்துகேட்பு கூட்டத்திற்கு ஏற்பாடு
ADDED : ஏப் 23, 2024 04:10 AM
மத்திய அரசின் சுற்றுச்சூழல் வனம்,காலநிலை மாற்றம் அமைச்சகம், நாட்டில் உள்ள அனைத்து கடற்கரை மாநிலங்களின் வளர்ச்சியை ஒழுங்குப்படுத்த, கடற்கரை ஒழுங்கு முறை மண்டல சிறப்பு திட்டத்தினை கடந்த 2019ம் ஆண்டு அறிவித்தது. இதன்படி நாட்டில் உள்ள கடற்கரை பகுதிகளில் செயல்படுத்தப்படும் செயல்கள்,திட்டங்கள் அனைத்தும் ஒரே குடையின் கீழ் கொண்டுவரப்பட்டு ஒழுங்குமுறைப்படுத்தப்பட உள்ளது.
சிறப்புகள் என்ன
அதன்படி, புதுச்சேரி மாநிலத்திலும் நான்கு பிராந்தியங்கள் உள்ளடங்கிய திருத்தப்பட்ட கடற்கரை ஒழுங்குமுறை மண்டல மேலாண்மை வரைவு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பானையில் கடற்கரை பகுதிகள் 4 மண்டலங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
சுற்றுச்சூழல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளாக பவளப்பாறைகள், அலையாத்தி காடுகள், கழிமுகங்கள், மணல் குன்றுகள், பாரம்பரிய மீனவர்களின் வாழ்விடங்கள், மீனவர்கள் தொழில் செய்யும் இடங்கள் ஆகியவை சட்டப்படி பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளது.
இவ்விடங்களில் வளர்ச்சி என்ற பெயரில் எந்த ஒரு புதிய திட்டங்களையும் செயல்படுத்த தடை செய்யப்படுகிறது.இதேபோல் கடலோர மக்களின் குடியிருப்புகள், பாதைகள், பள்ளிக்கூடம், கோயில்கள், விளையாட்டு மைதானம், மீன் இறக்கும் தளம், மீன் காய வைக்கும் இடம், படகுகள் நிறுத்தும் இடம், வலைகள் பழுது பார்க்கும் இடம், இவைகள் அனைத்தும் வரைபடத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கருத்து கேட்பு
இந்த திருத்தப்பட்ட கடற்கரை ஒழுங்குமுறை மண்டல மேலாண்மை திட்டம் குறித்து கருத்து கேட்பு கூட்டம் நடத்தி இறுதி செய்யப்பட உள்ளது. அடுத்த மாதம் 22ம் தேதி காலை 10 மணியளவில் கம்பன் கலையரங்கில் இதற்கான கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இக்கூட்டத்தில் உள்ளூர் மக்கள் பங்கேற்று கருத்துகளை தெரிவிக்கலாம் என அழைக்கப்பட்டுள்ளது.
எங்கெங்கு கிடைக்கும்
திருத்தப்பட்ட புதுச்சேரி கடற்கரை மண்டல மேலாண்மை திட்டத்தின் நகல்கள்,புதுச்சேரி கலெக்டர் அலுவலகம்,புதுச்சேரி நகராட்சி அலுவலகம், உழவர்கரை நகராட்சி ஆணையர் அலுவலகம், அரியாங்குப்பம்,பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகம், மாசுகட்டுப்பாட்டு குழுமம் ஆகிய இடங்களில் அலுவலக நாட்களில் பார்வையிடலாம்.
இணையதளம்
இதேபோல் திருத்தப்பட்ட கடற்கரை மண்டல மேலாண்மை திட்டத்தின் வரைவு நகல்கள் மாசுக்கட்டுபாடு குழுமத்தின் https://dste.py.gov.in/ppcc/czmp--2019.html என்ற இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்தை பற்றிய பொதுமக்கள் தங்களுடைய கருத்துகளை அடுத்த 30 நாட்களுக்குள் உறுப்பினர் செயலர், புதுச்சேரி மாசுக்கட்டுப்பாடு குழுமம்,3-வது தளம், புதுச்சேரி வீட்டு வசதி வாரிய வளாகம், அண்ணா நகர், புதுச்சேரி-605005,அல்லது dste@py.gov.in,ppcc@py.gov.in என்ற இமெயில் முகவரியில் அனுப்பலாம் எனவும் மாசுக்கட்டுபாட்டு குழுமம் அறிவித்து, கருத்து கேட்பு கூட்டத்திற்கான ஏற்பாடுகளை முடுக்கிவிட்டுள்ளது.

