/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காரைக்காலில் கோவில் இடத்தை போலி பட்டா தயாரித்து விற்பனை புரோக்கர் அதிரடி கைது
/
காரைக்காலில் கோவில் இடத்தை போலி பட்டா தயாரித்து விற்பனை புரோக்கர் அதிரடி கைது
காரைக்காலில் கோவில் இடத்தை போலி பட்டா தயாரித்து விற்பனை புரோக்கர் அதிரடி கைது
காரைக்காலில் கோவில் இடத்தை போலி பட்டா தயாரித்து விற்பனை புரோக்கர் அதிரடி கைது
ADDED : செப் 09, 2024 05:03 AM

காரைக்கால்: காரைக்காலில் பார்வதீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான, 4 ஏக்கர் நிலத்தை போலி பட்டா தயாரித்து, விற்பனை செய்த வழக்கில் புரோக்கர் கைது செய்யப்பட்டார்.
காரைக்காலில் பிரசித்தி பெற்ற பார்வதீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு பல ஏக்கரில் நிலங்கள் காரைக்கால் முழுவதும் உள்ளன.
இதில், ஜிப்மர் வளாகம் பைபாஸ் அருகில் உள்ள நான்கு ஏக்கர் கோவில் நிலம் 'ஸ்மார்ட்' சிட்டி திட்டத்தின் கீழ், வருவாய் துறை பெற்று அதனை வணிக வளாகம் கட்டவும், மீதமுள்ள இடங்களை பட்டாக்களாக மாற்றி அரசு நில வழிகாட்டுதல் தொகை, ஜி.எல்.ஆர் மதிப்பின் அடிப்படையில் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக சமூக வலை தளத்தில் தகவல் பரவியது.
மேலும் புதுச்சேரி அரசு கோவில் நிலத்தை 'ஸ்மார்ட்' சிட்டி திட்டத்தின் கீழ், கையகப்படுத்தி விற்க உள்ளது போன்ற போலியான ஆவணமும் சமூக வலைதளத்தில் பரவியது.
இது குறித்து தகவல் அறிந்த கலெக்டர் மணிகண்டன் வருவாய் துறை விசாரித்து அறிக்கை தர உத்தரவிட்டார்.
சப்-கலெக்டர் ஜான்சன் இது தொடர்பாக விசாரணை நடத்திய போது, காரைக்காலை சேர்ந்த ஆனந்த், பார்வதீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலத்துக்கு போலி பட்டாக்கள் தயாரித்து, 20 க்கும் மேற்பட்டோரிடம் விற்பனை செய்துள்ளது தெரியவந்தது.
காரைக்கால், கீழ் காசா குடியைச் சேர்ந்த சிவராமன், 45; என்பவர் கோவில் நிலத்திற்கு, ஆனந்த் தயாரித்த போலி பட்டா மூலம் மூன்று நபர்களிடம் தலா ஒவ்வொரு மனையும், ரூ.5 லட்சம் என பேரம் பேசி, அட்வான்ஸ் தொகையாக மூவரிடம், தலா ஒரு லட்சம் வீதம் 3 லட்சம் வசூலித்து ஆனந்திடம் கொடுத்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து காரைக்கால் நகரப்பகுதி போலீசார் மோசடி வழக்கு பதிவு செய்து ஆனந்துக்கு புரோக்கர் போல வேலை செய்த சிவராமனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.
தலைமறைவாக உள்ள ஆனந்த் கைது செய்யப்பட்டால், எவ்வளவு பேருக்கு போலியான பட்டாக்கள் கொடுத்து ஏமாற்றினார் என்பது தெரியவரும்.
என்.ஆர்.காங்., பிரமுகருக்கு தொடர்பு
போலி பட்டாக்கள் தயாரித்து கோவில் நிலங்களை விற்பனை செய்து வழக்கில் தேடப்படும் ஆனந்த், என். ஆர்.காங்., பிரமுகர். இவர், அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ.,க்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்.
இதனால் இந்த கோவில் நில வழக்கில், மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகத்துடன், விசாரணையில் இறங்கி உள்ளனர்.