ADDED : ஜூலை 28, 2026 03:50 PM
புதுச்சேரி: காலாப்பட்டில் ஸ்கூட்டரை உடைத்து ரூ.2 லட்சம் திருடி சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரம், வானுார் அடுத்த பெரிய கொழுவரியை சேர்ந்தவர் சுமன், 41; சென்டரிங் பலகை வாடகை விடும் தொழில் செய்து வருகிறார். இவர், புதிதாக பலகை வாங்க நேற்று முன்தினம்(27 ம் தேதி) கோயம்புத்துார் செல்ல இருந்ததால், அங்கு முன்பணம் வழங்க, தனது 3.2 சவரன் நகையை காலாப்பட்டு இந்தியன் வங்கியில் அடகு வைத்து, ரூ. 2 லட்சம் கடன் பெற்றுக்கொண்டு அந்த பணத்தை தனது ஸ்கூட்டரின் டிக்கியில் ஆதார் கார்டு, வங்கி பாஸ்புக் மற்றும் நகை அடகு வைத்த ரசீது ஆகியவற்றை மஞ்சள் நிற தாம்பூல பையில் வைத்து மூடியுள்ளார்.
பின், அங்கிருந்து காலாப்பட்டு மத்திய பல்கலைக்கழகம் எதிரே உள்ள ஹோட்டலுக்கு சென்ற சுமன், மாலை 3:30 மணிக்கு ஹோட்டல் எதிரே ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு சாப்பிட சென்றார். தொடர்ந்து, 3.45 மணிக்கு சாப்பிட்டு விட்டு வெளியே வந்தபோது, அவரது ஸ்கூட்டரின் டிக்கி உடைக்கப்பட்டு, அதில் இருந்த பணம் வைத்திருந்த பை திருடுபோனது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
சுமன் அளித்த புகாரின் பேரில், காலாப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து, ஸ்கூட்டரை உடைத்து பணத்தை திருடிய மர்மநபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும், அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி., காட்சி பதிவுகளை பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.
