புதுச்சேரி : புதுச்சேரியில் அக்னி நட்சத்திரம் துவங்குவதிற்கு முன்னேர நேற்று 100.4 டிகிரி வெயில் பதிவானது.
புதுச்சேரியில் வழக்கத்திற்கு மாறாக பிப்ரவரி மாதம் துவக்கத்திலே வெயில் மக்களை வாட்டி வதைக்க துவங்கி விட்டது. மார்ச், ஏப்ரல் மாதங்களில் நாள் முழுதும் கடும் வெயில் அடித்தது. வெயிலின் உஷ்ணம் காரணமாக பகல் நேரத்தில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர அஞ்சினர்.
அக்னி நட்சத்திரம் நாளை மறுநாள் 4ம் தேதி துவங்கி 28ம் தேதி முடிகிறது. ஆனால் அதற்கு முன்னரே வெயிலின் உக்கிரம் அதிகமாகி வருகிறது.
புதுச்சேரியில் கடந்த வாரங்களில் தினசரி 95 முதல் 98 டிகிரி வெயில் பதிவாகி இருந்த வெயில் நேற்று 100.4 டிகிரியை தொட்டது. மே மாதம் முதல் தேதியிலே சதம் அடித்த வெயில், வரும் நாட்களில் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
விடுமுறை நாட்களில் கடற்கரை, சுற்றுலா தளங்களில் உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்து விடுவர். ஆனால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தால், நேற்று பகல் நேரத்தில் கடற்கரை உள்ளிட்ட சுற்றுலா தளங்கள் வெறிச்சோடி காணப்பட்டது. மாலையில் பகல் நேர வெக்கையை தணிக்க கடற்கரை உள்ளிட்ட இடங்களில் மக்கள் அதிக அளவில் குவிந்தனர்.

