/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இரும்பு கம்பி அனுப்புவதாக ரூ. 30 லட்சம் மோசடி
/
இரும்பு கம்பி அனுப்புவதாக ரூ. 30 லட்சம் மோசடி
ADDED : ஜூலை 04, 2024 03:36 AM
புதுச்சேரி : இரும்பு கம்பிகள் அனுப்புவதாக கூறி ரூ. 30 லட்சம் மோசடி செய்த மர்ம நபர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
ரெட்டியார்பாளையம், பொன் நகர், 3வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் சேதுராமன், 53; கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்.
இவரை தொடர்பு கொண்ட மர்ம நபர், விசாகப்பட்டினத்தில் இரும்பு கம்பெனி நடத்தி வருவதாகவும், இரும்பு கம்பிகள் விற்பனை டீலர்ஷிப் வழங்குவதாகவும், இரும்பு கம்பிகள் விலை விபரங்களை வாட்ஸ்ஆப்பில் பகிர்ந்தார். இதனை நம்பி இரும்பு கம்பிகள் வாங்க சேதுராமன், ஆன்லைன் மூலம் ஆர்டர் கொடுத்தார்.
இதற்காக மூன்று பரிவர்த்தனையாக 30.97 லட்சம் பணம் வங்கி கணக்கு மூலம் அனுப்பினார். பணம் அனுப்பிய பின்பு மர்ம நபர்கள் அனுப்பிய பில்கள் அனைத்தும் போலியாக இருந்தது. வங்கியில் சென்று விசாரித்தபோது, விசாகப்பட்டினம் ராம்குமார் என்பவரது வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பட்டு அங்கிருந்து பலரது வங்கி கணக்கிற்கு பணம் பிரித்து அனுப்பட்டுள்ளது தெரியவந்தது.
இது தொடர்பாக சேதுராமன் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.