/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தலைவர்கள் சிலைகளை கட்டாயம் மூடணுமா?
/
தலைவர்கள் சிலைகளை கட்டாயம் மூடணுமா?
ADDED : ஏப் 08, 2024 05:25 AM
புதுச்சேரி: அ.தி.மு.க., கட்சி அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர்., சிலை மறைக்கப்பட்டுள்ளதும், பஸ் நிலையத்தில் உள்ள எம்.ஜி.ஆர்., சிலை மறைக்காமல் உள்ளதும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சிகளின் கொடிகள், சின்னங்கள் பொறிக்கப்பட்ட கொடிக்கம்பங்கள், வளைவுகள் மற்றும் தேர்தலில் மக்கள் மனதில் பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான சிலைகள் மூடப்படுவது வழக்கம்.
லோக்சபா தேர்தலை முன்னிட்டு, புதுச்சேரியில் உள்ள மறைந்த தலைவர்கள் சிலைகள் மூடப்படவில்லை. அதே நேரத்தில், கட்சி அலுவலகத்தில் உள்ள சிலைகள் மூடப்பட்டுள்ளன. உப்பளம் அ.தி.மு.க., கட்சி அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர்., சிலை மறைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் புது பஸ் நிலையம் எதிரே உள்ள எம்.ஜி.ஆர்., சிலை மூடப்படவில்லை. இது பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து தேர்தல் அதிகாரிகள் கூறுகையில், 'உயிரோடு உள்ள தலைவர்களின் சிலைகளை தான் மூட வேண்டும்.
மறைந்த தலைவர்களின் சிலைகளை மூட தேவையில்லை. ஒருவேளை, மறைந்த தலைவர்கள் சிலைகள் சின்னத்தை வெளிப்படுத்துவதாக இருந்தால், அது வெளிப்படுத்தும் இடத்தினை மறைத்தால் மட்டும் போதும். எம்.ஜி.ஆர்., சிலை மறைப்பு தொடர்பாக எங்கள் கவனத்திற்கு தகவல் வரவில்லை' என்றனர்.

