சிலம்ப விளையாட்டுக்கு அங்கீகாரம் வேண்டும் :சிலம்பம் மற்றும் அடிமுறை சங்கம் கோரிக்கை
சிலம்ப விளையாட்டுக்கு அங்கீகாரம் வேண்டும் :சிலம்பம் மற்றும் அடிமுறை சங்கம் கோரிக்கை
UPDATED : ஜூலை 15, 2026 11:01 PM
ADDED : ஜூலை 15, 2026 06:01 PM
பாகூர்: தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டு மற்றும் தற்காப்பு கலையான சிலம்பம் கலைக்கு, மாநில அரசு அங்கீகாரம் வழங்கிட வேண்டும் என புதுச்சேரி சிலம்பம் மற்றும் அடிமுறை சங்கம் வலியுறுத்தி உள்ளது.
இதுகுறித்து, சங்க செயலாளர் அன்புநிலவன் விடுத்துள்ள அறிக்கை:
தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டு மற்றும் தற்காப்பு கலையான சிலம்பத்திற்கு, அங்கீகாரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை பல ஆண்டுகளாக முன்வைத்து வருகிறோம். ஆனால், அரசு இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. புதுச்சேரியில் ஆயிரக்கணக்கான சிலம்ப வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் மாணவர்கள் பல ஆண்டுகளாக இந்தக் கலையை வளர்த்து வருகின்றனர்.
மாநில, தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்று பதக்கங்கள் வென்றும், இன்னும் சிலம்பத்திற்கு உரிய மாநில அங்கீகாரம் வழங்கப்படாதது மிகுந்த வேதனையை அளிக்கிறது. அரசுக்கு பலமுறை மனுக்கள் அளித்தும் அரசு இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை. அரசின் இந்த மவுனம் சிலம்ப வீரர்களை ஏமாற்றம் அடையச் செய்துள்ளது. அரசு இனியேனும், சிலம்பம் மற்றும் அடிமுறைக்கு மாநில அங்கீகாரம் வழங்க வேண்டும்.
சிலம்ப வீரர்களின் நலன் மற்றும் உரிமைகளை பாதுகாக்க வேண்டும். பிற விளையாட்டுகளுக்கு வழங்கப்படுவதுபோல், சிலம்ப விளையாட்டிற்கும், கல்வி, வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
