வங்கி மோசடிகளுக்கு எதிராக நடவடிக்கை கோரி சிவா மனு
வங்கி மோசடிகளுக்கு எதிராக நடவடிக்கை கோரி சிவா மனு
ADDED : ஜூலை 17, 2026 05:01 PM
புதுச்சேரி: வங்கி மோசடிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி.மு.க., எம்.பி.,க்களிடம் மாநில அமைப்பாளர் சிவா மனு அளித்தார்.
புதுச்சேரிக்கு அரசு முறை பயணமாக பார்லிமெண்ட் நிலைக்குழுவைச் சேர்ந்த உயர்மட்ட எம்.பி.,க்கள் வந்துள்ளனர். இதில் தி.மு.க., எம்பிக்கள் தமிழச்சி தங்கபாண்டியன், கான்ஸ்டண்டியன் ஆகியோரை தி.மு.க., மாநில அமைப்பாளர் சிவா சந்தித்தார்.
அப்போது அகில இந்திய வங்கி மற்றும் வங்கி அல்லாத வாடிக்கையாளர்கள் நலன் மற்றும் பாதுகாப்பு அமைப்பு சார்பில், தயாரிக்கப்பட்ட மனுவை எம்.பி.,க்களிடம் ஒப்படைத்து, வங்கி நடைமுறைகளில் இடம்பெறும் விதி மீறல்கள் மற்றும் மோசடிகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
பின் மாநில அமைப்பாளர் சிவா கூறுகையில், ‘வங்கி மோசடிகளால் ஆயிரக்கணக்கான நேர்மையான வாடிக்கையாளர்களும் சிறு தொழில்முனைவோர்களும் பாதிக்கப்படுவது கவலைக்குரிய விஷயம். எம்.பி.,க்கள் இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்துக்கொண்டு உரிய விசாரணை மற்றும் சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இந்த மனு, நாடு முழுதும் பாதிக்கப்பட்ட நேர்மையான கடனாளிகளுக்கு நீதி கிடைக்கவும், வங்கி துறையில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை உறுதி செய்யவும் முக்கியமானதாக கருதப்படும்’ என்றார்.
அப்போது, கார்த்திகேயன் எம்.எல்.ஏ., இளைஞர் அணி அமைப்பாளர் சம்பத், தொகுதி செயலாளர்கள் சக்திவேல், ஆறுமுகம், தியாகராஜன், வடிவேல், மகளிர் அணி அமைப்பாளர் காயத்ரி ஸ்ரீகாந்த் ஆகியோர் உடனிருந்தனர்.
