திருமணம் செய்து வைக்காததால் ஆத்திரம்: தந்தையை கொலை செய்த மகன் கைது
திருமணம் செய்து வைக்காததால் ஆத்திரம்: தந்தையை கொலை செய்த மகன் கைது
UPDATED : ஜூன் 13, 2026 08:47 PM
ADDED : ஜூன் 13, 2026 08:44 PM
விழுப்புரம்: விழுப்புரம் அருகே, திருமணம் செய்து வைக்காததால் தந்தையைக் கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம், காணை அடுத்த ஏ.கூடலுார் கிராமத்தைச் சேர்ந்தவர் அருணகிரி, 69; விவசாயி. இவரது மனைவி லட்சுமி, 66; இவர்களுக்கு, தீனதயாளன், 45; சரவணன், 42; மணிகண்டன், 40; என்ற மகன்களும், பரமேஸ்வரி, 38; சரஸ்வதி, 35; என்ற மகள்களும் உள்ளனர்.
இதில், கூலித் தொழிலாளியான மணிகண்டனை தவிர அனைவருக்கும் திருமணமாகி குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.
சில ஆண்டுகளாக மணிகண்டன் தனது பெற்றோரிடம் தனக்கு திருமணம் செய்து வைக்கக் கோரி, தகராறு செய்து வந்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு மணிகண்டன், தனக்கு திருமணம் செய்து வைக்கவில்லை எனக் கூறி, தாய் லட்சுமியிடம் வாக்குவாதம் செய்து, ஆத்திரமடைந்து தாயை தாக்க முயன்றார். இதனை தந்தை அருணகிரி தடுத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன், தந்தையை மரக்கட்டையால் தலை, மார்பு பகுதிகளில் தாக்கினார். இதில், படுகாயமடைந்த அருணகிரி, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று அதிகாலை 3:45 மணிக்கு இறந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக காணை போலீசார், கொலை வழக்குப் பதிந்து மணிகண்டனை கைது செய்தனர்.
