ADDED : ஜூன் 29, 2026 05:30 PM
உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே சொத்தை பிரித்து தராததால், தந்தையை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை தாலுகா, பு.கொணலவாடியை சேர்ந்தவர் ராமசாமி, 71; ஆசாரி. இவருக்கு மனைவி கலா, 65; மகள் கற்பகம், 49; மகன்கள் செந்தில், 48; கலியபெருமாள், 47; உள்ளனர். மகன்கள் சொத்தை பிரித்து கேட்டும் கொடுக்காமல் கொஞ்சம் கொஞ்சமாக விற்று வந்துள்ளார்.
மகன் கலியபெருமாள் ெஷட் அமைத்து தனது பராமரிப்பில் வைத்திருந்த 9 சென்ட் வீட்டுமனையையும் விற்க, முன்பணம் பெற்றதாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டுமனையில் இருந்த ஷெட்டை பிரிக்க ராமசாமி ஆட்களுடன் சென்றார். அப்போது ராமசாமிக்கும், அவரது மகன் கலியபெருமாளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த கலியபெருமாள், இரும்பு கம்பியால் தாக்கியதில் ராமசாமி படுகாயமடைந்தார். உடன் அவரை உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த ராமசாமி நேற்று முன்தினம் இரவு 10:30 மணியளவில் இறந்தார்.
இதுகுறித்து உளுந்துார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து தந்தையை கொலை செய்த மகன் கலியபெருமாளை கைது செய்தனர்.
